Last Updated : 01 Aug, 2016 11:55 AM

 

Published : 01 Aug 2016 11:55 AM
Last Updated : 01 Aug 2016 11:55 AM

தேர்தல் வெற்றிக்காக தொடர் ஆன்மிக பயணம்: ரங்கசாமி பாணியை பின்பற்றும் நாராயணசாமி

தேர்தல் வெற்றிக்காக தொடர் ஆன்மிக பயணத்தை மேற்கொள்ளுவதை தனது பாணியாக வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ரங்கசாமி. அதை விமர்சித்து வந்த நாராயணசாமி, அதே பாணியில் ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களிலும் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி, வாரியத்தலைவர் பதவிகள் தரப்பட்டுள்ளன. ஒரு எம்எல்ஏ மட்டும் பதவி பெறவில்லை. அதேபோல் திமுக எம்எல்ஏக்களுக்கும் வாரியத்தலைவர் பதவிகள் தரப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் தேர்வு செய்ததால் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நாராயணசாமி முதல்வரானார். முதல்வர் பதவியில் நீடிக்க ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நாராயணசாமி உள்ளார்.

புதுச்சேரியில் கடந்தமுறை முதல்வராக இருந்த ரங்கசாமி எப்போதும் ஆன்மிக பயணத்தில் அதிக கவனம் செலுத்துவார். சேலம், ஈரோடு என பல்வேறு ஊர்களுக்கு அடிக்கடி ஆன்மிக பயணம் மேற்கொள்வார்.

தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது அடிக்கடி ஆன்மிக பயணம் மேற்கொண்டதில்லை. ரங்கசாமி ஆன்மிக பயணம் சென்றதை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது முதல்வரான பிறகு முன்னாள் முதல்வர் ரங்கசாமியைப் போல் தொடர் ஆன்மிக பயணத்தில் ஈடுபடுகிறார். குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தொடங்கி திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், சித்தர் கோயில்கள் என தொடர் ஆன்மிக பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முக்கியக் காரணம் விரைவில் வரவுள்ள இடைத்தேர்தல். தனது தேர்தல் வெற்றிக்காக சனிக்கிழமைகளில் இப்பயணத்தை அதிகளவில் நாராயணசாமி ஈடுபடுகிறார். தொகுதியை விட்டுத்தர எம்எல்ஏக்கள் முன்வர வேண்டும் என்பதற்காகவும் ஆன்மிக பயணம் நடப்பதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலேயே பேசுகின்றனர்.

எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று நாராயணசாமியிடம் கேட்டால், “அறிவிப்பு வெளியாகும்போது தெரியும்” என்றே குறிப்பிடுகிறார்.

அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கேட்டதற்கு, “நகரப் பகுதியில் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஒரு தொகுதியில்தான் அவர் போட்டியிட உள்ளார். விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்” என்று நாராயணசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகையில், “தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுடன் இத்தொகுதியின் இடைத்தேர்தலை நடத்தவே விரும்புகிறோம். அப்படி நடத்தினால் அதிமுக தமிழகத்தில் கவனம் செலுத்துவது எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதற்கான முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்” என குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x