Published : 05 Oct 2014 10:58 AM
Last Updated : 05 Oct 2014 01:12 PM
மத்திய அரசின் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால் தமிழகத்துக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் 3 மணி நேரத்துக்குமேல் மின் வெட்டு அமலாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மின் வெட்டு குறைந்து, போதுமான அளவுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தொழில் துறையினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மின் தட்டுப்பாடின்றி தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, செப்டம்பருடன் பருவ காலம் முடிந்துவிட்டதால் அக்டோபர் முதல் காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு குறைந்துவிட்டது. சில நேரங்களில் காற்றாலைகளில் பூஜ்யம் என்ற அளவில் உற்பத்தி முடங்கிவிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கடந்த 23-ம் தேதி முதல் தமிழகத்தில் தொழில் துறையினருக்கான உயரழுத்த மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு 20 சதவீத மின் பயன்பாடு கட்டுப்பாடு மற்றும் 90 சதவீத மின் வெட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் காற்றாலை மின் உற்பத்தியால் ஏற்பட்ட தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. அதேநேரம் வீடுகளுக்கான மின் வெட்டு அட்டவணை குறித்து, எந்த முன்அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் கொண்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளுக்கும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுமார் 3 மணி நேரம் வரை மின் வெட்டு அமலாகி வருகிறது.
தசரா, பக்ரீத், தீபாவளி பண்டிகை சீசன் காலம் என்பதால் உற்பத்தி மற்றும் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்களும் தொழில் துறையினரும் தெரிவித்துள்ளனர். மின் வெட்டை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் பயன்பாட்டாளர்கள் அமைப்பினர் தமிழக அரசுக்கும் மின் வாரியத்துக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
தற்போதைய மின் வெட்டு குறித்து மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய அரசின் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறுகளே, அதிகபட்ச மின் வெட்டுக்கு காரணம்’ என்று தெரிவித்தனர். கூடங்குளம் அணு மின் நிலையம், நெய்வேலி நிலக்கரி மின் நிலையம், சிம்மாத்ரி, வல்லூர் தேசிய அனல் மின் கழக மின் நிலையம் உள்ளிட்டவற்றின் கோளாறுகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி, மத்திய அரசின் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 3,920 மெகாவாட்டில் 2,214 மெகாவாட் மட்டுமே தமிழக மின் வாரியத்துக்கு கிடைத்தது. மத்திய அரசின் மின் நிலையங்களால் மட்டும் சுமார் 1,700 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.
காற்றாலைகளில் கடந்த மாதம் வரை, சராசரியாக 2,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி வெறும் 88 மெகாவாட் மட்டுமே கிடைத்தது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 237.22 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. தொழில் துறையினருக்கு சுமார் 6 மில்லியன், வீடுகளுக்கு 14.53 மில்லியன் யூனிட் மின்சாரம் மின்வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டது.