தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பருத்தி சாகுபடிக்கு மாறிய விவசாயிகள் - குறைந்த தண்ணீர் போதுமானது; பராமரிப்பு செலவும் குறைவு

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பருத்தி சாகுபடிக்கு மாறிய விவசாயிகள் - குறைந்த தண்ணீர் போதுமானது; பராமரிப்பு செலவும் குறைவு
Updated on
1 min read

தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, வழக்கமான கோடை நெல் சாகுபடியை கைவிட்டு பருத்தி சாகுபடிக்கு விவசாயிகள் பலர் மாறியுள்ளனர்.

கடந்தாண்டு கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் வரவில்லை, வடகிழக்குப் பருவ மழையும் போதியளவு பெய்யவில்லை. எனவே, ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவையைத் தொடர்ந்து சம்பா சாகுபடி செய்யவில்லை.

தற்போது பருவமழையும் பொய்த்து ஆற்றிலும் தண்ணீர் வராததால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே, பம்ப் ஷெட் விவசாயிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைச் சமாளிக்க, கோடை நெல் சாகுபடி செய்துவந்த விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நடப் பாண்டு மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம், திருவாரூர் தாலுகா பகுதிகளில் பரவலாக 6,919 ஹெக்டேர் பரப்பளவுக்கு பருத்தி சாகுபடி செய்துள்ளதாக வேளாண் துறை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது கடந்தாண்டை விட சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் அதிகம்.

இதுகுறித்து சேரன்குளத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியபோது, “நெல் சாகுபடிக்கு தினமும் அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையோ தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பருத்திக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்பதால் இந்த ஆண்டு பருத்தி சாகுபடிக்கு மாறியுள்ளேன்” என்றார்.

வாஞ்சியூரைச் சேர்ந்த செல்வம் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளாகவே பெரிய அளவுக்கு மழையில்லை. ஆற்றிலும் தண்ணீர் வராமல் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இறைப்புத் திறன் குறைந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலங்களில் 100 அடி என இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 300 முதல் 350 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டதால் எங்கள் பகுதியில் பரவலாக பருத்தி சாகுபடிக்கு மாறிவருகின்றனர். நான் 3 ஆண்டுகளாக பருத்தி சாகுபடி மேற்கொண்டு வரு கிறேன்” என்றார்.

வேளாண்மை இணை இயக் குநர் மயில்வாகனன் கூறியபோது, “நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 1,250 மி.மீ. தண்ணீர் தேவைப்படும். ஆனால், பருத்தி சாகுபடிக்கு 600 மி.மீ. தண்ணீர் போதுமானது. தற்போதைய தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு மாறி வருவது வரவேற்புக்குரியது. கடந்த 2011-ம் ஆண்டு வரை திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக 560 ஹெக்டேர் மட்டுமே பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீர் பற்றாக் குறையால் பருத்தி சாகுபடி கடந்தாண்டு 5,172 ஹெக்டேர், நடப்பாண்டு 6,919 ஹெக்டேர் என அதிகரித்துள்ளது. நெல்லை விட பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in