

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, கிராமப்புறங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரால் நடத்தி வந்தது.
பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை இந்த திட்டம் உருவாக்கிக் கொடுத்தது. வேலை வாய்ப்பை பெற்றவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்.
மொத்த பயனாளிகளில் பாதி பேர் ஆதிவாசிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்திட்டத்தை முடக்கி வைக்க முயல்கிறது என்ற செய்தி கவலை தருகிறது. இத்திட்டத்துக்கான சம்பளம் நிறுத்தப்படுகிறது. மற்றும் தாமதமாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வேலை என்கிற தத்துவத்தை சீரழிக்கும் விதமாக இந்தத் திட்டத்தில் மாநில அரசின் செலவினங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இதைவிட ஆபத்தான விஷயம், இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 200 மாவட்டங்களில் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்வதாக தெரிகிறது. ஆகவே, பாரதிய ஜனதா அரசின் இந்த முயற்சியை எதிர்த்து கிராமப்புற மக்கள், குறிப்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கின்ற இந்த செயலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வட்டார அளவில் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.