

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில்: காமராஜர் சாலையிலிருந்து வலது புறமாக ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்புவோருக்கு சாலை சரியாக தெரியாமல் மறைக்கும் வகையில் சிவாஜி கணேசன் சிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே அந்தச் சிலையை அகற்றலாம் என தெரிவித்துள்ளது. சிலையை அகற்றி மெரினா கடற்கரையோரம் வைக்கலாம் எனவும் அரசு பதில் மனுவில் பரிந்துரைத்துள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் (காமராஜர் சாலை) காந்தி சிலை அருகே நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை அமைக்கக் கூடாது எனக் கோரி கடந்த 2006-ம் ஆண்டு பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, காமராஜர் சாலையிலிருந்து வலது புறமாக ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்புவோருக்கு சாலை சரியாக தெரியாமல் மறைக்கும் வகையில் சிவாஜி சிலை உள்ளது என்று வாதம் செய்தார்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்றலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.