

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூர் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் மனோஜ்(40). இவர் உத்தண்டி பிரதான சாலையில் அடகுக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் கடையில் மனோஜின் தம்பி சுரேஷ் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நகை அடகு வைக்க வேண்டும் என்று கூறி பேசிக்கொண்டு இருந்தனர்.
சில நிமிடங்களில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலும் 3 பேர் வந்தனர். திடீரென 6 பேரும் கடைக்குள் புகுந்து சுரேஷை தாக்கினர். பின்னர் 3 பேர் சுரேஷை தாக்க, 3 பேர் கடையில் இருந்த நகைகளை ஒரு பையில் சேகரித்துகொண்டு இருந்தனர்.
சுரேஷின் சத்தம் கேட்டு அருகே கடை வைத்திருந்த ஒரு பெண் கூச்சலிட்டார். இதனால், மற்ற கடைக்காரர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்றவர்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்கள் கூடியதை அறிந்த கொள்ளை கும்பல், நகைகளை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது.
தகவலறிந்த கானாத்தூர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அடகுக் கடையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில், கொள்யையடிக்க வந்த 6 பேரின் உருவங்களும், மோட்டார் சைக்கிள் எண்களும் பதிவாகி உள்ளன. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.