

கடந்த 2004 ஜூலை 16-ல் கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளி களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 93 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க நியமிக்கப் பட்ட ஒருநபர் ஆணையரான ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தீ விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க சிபாரிசு செய்தார்.
இந்நிலையில் ஒருநபர் ஆணையரின் சிபாரிசை ஏற்க முடியாது எனக் கூறி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சார்பில் இன்பராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘இறந்த 93 குழந்தை களின் பெற்றோருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதமும், படுகாயமடைந்த 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.20 லட்சம் வீதமும், லேசான காயமடைந்த 10 குழந்தை களின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும் என மொத்தம் ரூ.24 கோடியே 95 லட்சத்தை நிவாரணமாக சம்பவம் நடந்த தேதியில் இருந்து 9 சதவீத வட்டி யுடன் வழங்க உத்தரவிட வேண் டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக பள்ளி நிர்வாகத்தின் கருத் தையும் அறிய வேண்டும். எனவே பள்ளி நிர்வாகங்களையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகா தேவன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலர் மற் றும் தற்போது சிறையில் உள்ள பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மற்றும் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளின் தாளாளர் பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை வரும் ஜூலை 13-க்கு தள்ளி வைத்தனர்.