Published : 31 Aug 2016 04:49 PM
Last Updated : 31 Aug 2016 04:49 PM

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: ஜவாஹிருல்லா

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவிற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான முக்கிய நீராதாரமாக சிறுவாணி, பவானி ஆறுகள் விளங்குகின்றன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஆறான பவானி, நீலகிரியில் தொடங்கி கேளர எல்லையில் உள்ள அட்டப்பாடி வழியாக முக்காலி என்னும் இடத்தில் மீண்டும் தமிழகத்தில் பாய்கிறது.

சிறுவாணி, பவானி ஆறுகளின் குறுக்கே அட்டப்பாடியிலும், முக்காலியிலும் புதிய தடுப்பணைகள் கட்ட கேரளா நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. தமிழக அரசு மற்றும் கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கேரளா தனது திட்டத்தை நிறுத்தி வைத்தது.

இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் எந்தத் திட்டத்தையும் கர்நாடகம் மற்றும் கேரள மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கேரளாவின் இந்த அணை கட்டும் திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கடந்த ஆகஸ்ட் 11,12-ம் தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அணை கட்டினால் அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்து பாதிக்கப் படும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாகும். அமராவதி ஆற்றினால் செயல்படுத்தப்படும் பல கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

கேரள அரசு நீர் எடுக்க உரிமைப் பெற்றுள்ள ஜி.டி.சாவடி பகுதிக்கு கீழே உள்ள பகுதியில் தமிழகத்தில் உள்ள எமரால்டு, எம்காண்டி, குந்தா, பைகாரா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, சாண்டியானா, கெலன், மாயாறு, பார்சன்வேலி, போத்திமூட், கெத்தை ஆகிய நீர் மின் உற்பத்தி அணைகள் பெரிதும் பாதிக்கும்.

இரு மாநிலங்களிடையே ஓடும் நதியை ஒரு மாநிலத்தின் அனுமதி இல்லாமல் மற்றொரு மாநிலம் அணை கட்ட அனுமதி அளித்திருப்பது மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டு செய்திருக்கும் துரோகமாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

ஏற்கெனவே, காவிரியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதால் கொங்கு மண்டலமே பாலைவனமாக மாறும் அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.

எனவே, மத்திய அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசிற்கு வழங்கியுள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x