

மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரானை ஞாபகம் இருக்கிறதா? சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும்போதே விபத்தில் இறந்த மரியம்பிச்சையின் மகன். இவரை நினைவிருந்தால் துர்கேஸ்வரியையும் மறந்திருக்கமாட்டீர்கள்.
கைவிட்ட மீரான்
தன்னை திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து கர்ப்பமாக்கியதாக மீரானிடம் நியாயம் கேட்டுப் போராடுபவர் துர்கேஸ்வரி. இவருக்குப் பிறந்த பெண் குழந்தை ஆசிக் மீரானுடையதுதானா என்பதை உறுதிசெய்ய நடத்தப்பட மரபணு சோதனை முடிவுகள் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள் ளது. இவர் தொடர்ந்த ஜீவனாம்ச வழக்கும் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்குகள் தனக்கு நிச்சயம் நியாயத் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் தொடர் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் துர்கேஸ்வரி, ‘எனக்கு மட்டுமல்ல.. என்னைப் போல் பாதிக்கப்பட்ட அபலைகளுக்காகவும் சட்ட ரீதியாக போராடப் போகிறேன். அதற்காகவே சட்டம் படிப்பேன்’ என்கிறார்.
அவமானப்படுத்தினார்கள்
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், ‘‘எனக்கும் எனது குழந்தைக்கும் எனது அம்மா தான் இப்போதைக்கு ஆறுதல். அம்மாவுக்கு வரும் குடும்ப பென்ஷனை வைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். என்னை திருமணம் செய்வதாகச் சொல்லி விரட்டி விரட்டிக் காதலித்து கர்ப்பமாக்கிய ஆசிக் மீரான், துணை மேயர் ஆனதும்தான் மனம் மாறினார்.
அடித்துத் துன்புறுத்துவது, மிரட்டுவது என அவரிடம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. செத்தாலும் பரவாயில்லை அபலைப் பெண்களை ஏமாற்றும் இதுபோன்ற பேர்வழிகளை விடவேகூடாது என்று தீர் மானித்துக் கொண்டுதான் சட்ட நடவடிக்கைகளில் இறங்கினேன். ஆனால், அங்கேயும் எனக்கு ஏகப்பட்ட ஏமாற்றங் கள், அவமானங்கள்’’ என்று சற்றே நிதானித்தவர், ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். ‘‘எதிர்தரப்புக்காக உதவிய சட்டப் புள்ளிகள் விசாரணை எனும் பெயரில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே என்னை அவமானப் படுத்தினார்கள். அத்தனையையும் தாங்கிக் கொண் டேன். சட்டப் போராட்டமாக இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாது என்பதை சீக்கிரமே எனக்குப் புரியவைத்தார்கள்.
சட்டம் படிக்கப் போகிறேன்
என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம், நீதிமன்றம் என அலையும்போது, அவர்கள் சந்திக்கும் இதுபோன்ற அவஸ்தைகளுக்கு அளவே இல்லை. இதனால்தான், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வந்து போராட தயங்குகிறார்கள். எனது வாழ்க்கை எனக்கு நிறைய அனுபவப் பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. அந்த அனுபவத்தைக் கொண்டு, என்போல் பாதிக்கப்படும் அபலைகளுக்கு எவ்வித கட்டணமும் வாங்காமல் உதவும் முடிவுக்கு வந்திருக்கிறேன். இதற்காகவே சட்டம் படிக்கப் போகிறேன்.
காதலிக்கும் போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி உறவுக்கு அழைக்கும் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனதால்தான் என்னை நான் தொலைத்தேன். எனது வாழ்க்கையும், நிம்மதியும் பறிபோனது.’’ என்று சொல்லும் துர்கேஸ்வரி, காதலனால் கைவிடப்பட்ட திருச்சி மல்லிகைபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக களமிறங்கி, அந்தப் பெண்ணை காவல் நிலையத்திலேயே காத்திருப்புப் போராட்டம் நடத்த வைத்து அந்தப் பெண்ணின் காதலனை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்.