

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி நிலைகொண்டு இருப்பதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் தீபாவளி பண்டிகை அன்று மழை இல்லாததால் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்.
அதேபோல, இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று சற்று நகர்ந்துள்ளது. இது கன்னியாகுமரி கடல் பகுதியில் மேல்அடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, ‘‘குமரி கடல் பகுதியில் மேல்அடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்’’ என்றார்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.