

‘கபாலி’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு கோவையில் உள்ள திரையரங்குகளில் ‘பார்க்கிங்’ டிக்கெட்டுகளையும் கூட, முதல் காட்சி டிக்கெட்டுகளாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.மணிகண்டன் என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், கபாலி திரைப்படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு கோவை ஹோப்காலேஜ் அருகே உள்ள தியேட்டரில் முன்பதிவு டிக்கெட் கேட்டேன்.
அதில் 22-ம் தேதி (இன்று) காலை 6 மணி காட்சிக்கு ரூ.100 விலை நிர்ணயித்து டிக்கெட் வழங்கினார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்கு கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டையே (கார் பார்க்கிங் டிக்கெட்) தியேட்டர் நிர்வாகம் ரூ.100-க்கு விற்பனை செய்தது. இது குறித்து கேட்டபோது, காலைக் காட்சி பார்க்க வரும் அனைவருக்கும் இந்த டிக்கெட் தான் வழங்கப்படுகிறது என பதில் அளித்தனர்.
இதர டிக்கெட்டுகள் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மோசடி குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்க முயன்றேன்.
ஆனால் அதிகாரிகள் யாரும் புகாரைப் பதிவு செய்யவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
இதேபோல, ஏராளமான திரையரங்குகளிலும், வெளியிடங்களிலும் ரூ.1000 வரை, முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும், தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இதே விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் கூறும்போது, ‘புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு எந்தெந்த திரையரங்குகளில் இதுபோன்று மோசடி நடக்கிறது என்பதும் ஆய்வு செய்யப்படும்’ என்றார்.