Last Updated : 02 Jan, 2014 12:00 AM

 

Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

சென்னை: உயிரோடு விளையாடும் தெருவோர மின் இணைப்புப் பெட்டிகள்

உடைந்து, பாழாகிக் கிடக்கும் மின் இணைப்புப் பெட்டிகளால், மின் கசிவு உள்ளிட்ட ஆபத்துகள் அதிகரித்துள்ளன.

சென்னையில் தமிழக மின்சார வாரியத்தின் மின் இணைப்புகள் அனைத்தும், பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் மூலமே தரப்படுகிறது.

இந்த கேபிள்களின் மின் இணைப்பை வீடுகள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு வழங்க, தெருக்களில் ஆங்காங்கே மின் இணைப்பு பெட்டிகள் அமைக்கப்படுகின்றன.அவற்றின் வழியே இணைப்புப் பணிகளும், பராமரிப்புப் பணிகளும் நடக்கின்றன.

இத்தகைய மின் இணைப்புப் பெட்டிகள் பராமரிப்பு இல்லாமல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பாழாகிக் கிடக்கின்றன. மின் இணைப்புப் பெட்டிகளுக்கு பூட்டுப் போடாமல், மின் துறையினர் அலட்சியமாக விட்டுவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை கே.கே.நகரில் வசிக்கும் மணி கூறும்போது, “ மின் இணைப்புப் பெட்டிகள் பெரும் பாலும் திறந்தும் பாழடைந்தும் கிடக்கின்றன. அவற்றில் உள்ள கேபிள்கள் பல இடங்களில் அறுந்தும் கிடக்கின்றன. இதனால் மழைக்காலம் அல்லது வடிகால் களிலிருந்து கழிவு நீர் வெளியேறும் நேரங்களில் மின்சாரக் கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. சாதாரணமாக நடந்து செல்லும் ஒருவர் கூட இந்த மின்சார பெட்டியை எச்சரிக்கையாக கடக்க வேண்டும்.இல்லையென்றால் மின்சார அதிர்ச்சிக்குள்ளாகி உயிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்புள்ளது’’என்றார்.

திறந்துகிடக்கும் மின் இணைப்புப்பெட்டி வழியே சிலர் மின்சாரம் திருடுவதும் எளிதாகிறது.

சென்னையில் மண்ணடி, புளியந்தோப்பு, ராயபுரம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், ஷெனாய் நகர், சூளை, யானைகவுனி, கிண்டி, போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் உடைந்த, பராமரிப்பு இல்லாத தெரு மின் இணைப்புப் பெட்டிகள் காணப்படுகின்றன.

மோசமான மின் இணைப்புப் பெட்டிகளை பராமரிக்கக்கோரி, நேதாஜி போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், சென்னையின் பல இடங்களில் மின் இணைப்புப் பெட்டிகள் பராமரிப்பின்றி கிடப்பதாகக் கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 2012ல் அளித்த தீர்ப்பில், மின் இணைப்புப் பெட்டிகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும், பாழடைந்த, திறந்து கிடக்கும் பெட்டிகளை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புப் பெட்டிகள் பராமரிப்பின்றி, மோசமான நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘மின் இணைப்புப் பெட்டிகள் போதிய அளவு இல்லாததால், புதிய பெட்டிகள் மாற்ற முடியவில்லை. பெட்டி களைப் பூட்டினாலும், அவற்றின் கதவுகளை சமூக விரோதிகள் இரவு நேரங்களில் திருடி பழைய இரும்பு கடையில் போட்டு விடுகின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது போலீஸில் புகார் அளித்து வருகிறோம்,’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x