

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு, ஆதார் அட்டையை கேட்கக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அங்கு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை சமையல் எரிவாயு முகவர்களோ அல்லது எண்ணெய் நிறுவனங்களோ பயனாளிகளை ஆதார் அட்டையையோ அல்லது ஆதார் எண்களையோ சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று இடைக்கால உத்தரவில் தெரிவித்தது.
முன்னதாக, வழக்கறிஞர் ஆனந்தமுருகன் தாக்கல் செய்த மனுவில், "ஆதார் அட்டை வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி, வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ரேகை, கருவிழி போன்றவைகளை அடையாளமாக கொண்டு ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கும் அடையாள அட்டையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்புப்படி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால், மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆதார் அட்டை கேட்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது. அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.