

தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடந்த சோதனையின்போது சில ஆவணங்களைக் கைப்பற்றி ஓர் அறையில் வைத்துப் பூட்டிச் சென்றனர். தற்போது ஏற்கெனவே கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இதற்காக திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழு வந்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இருந்தாலும் தற்போது வீட்டில் இல்லை. வீட்டில் தற்போது அவரது தந்தை சின்னத்தம்பி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
விஜயபாஸ்கரின் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் ஏப்.7-ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் செயல்பட்டு வரும், கல்குவாரி, கிரஷர், ரெடிமிக்ஸ் ஆகியவற்றை, மத்திய பொதுப்பணித் துறை மற்றும் கனிமவளத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த இரு சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையில் அவற்றை சரிபார்த்து வருகின்றனர்.