

தமிழகத்தில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளதால், இடமாறுதலை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, சில மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான குழு, கேரளாவுக்கு வந்துள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை, அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் எம்பியுமான மு.தம்பிதுரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அவருடன் எம்பிக்கள் பி.வேணுகோபால், ஏ.நவநீதகிருஷ்ணன், பி.குமார், பி.செங்குட்டுவன், ஏ.டபிள்யூ. ரபிபெர்னார்ட், டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் இருந்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் 9 மாவட்ட ஆட்சியர்கள், 7 மாவட்ட எஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள், ஒரு டிஆர்ஓ மற்றும் சில கீழ்நிலை வருவாய், காவல்துறை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றியது. தொடர்ந்து முக்கிய பொறுப்பில் உள்ள உளவுத்துறை ஐஜி, சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையரும் மாற்றப்பட்டனர்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான எவ்வித புகாரும் எழவில்லை. இருப்பினும், தமிழக போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் டிஜிபி, தேர்தல் நடத்துவது தொடர்பான பொறுப்புகளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் டிஜிபியிடம் பிரித்தளித்துள்ளார். இவ்வாறு பெரிய அளவிலான இடமாற்றங்கள் என்பது தமிழகத்தில் எதிர்பார்க்காத ஒன்றாகும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்நோக்கத்துடன் அளித்த புகார்கள் அடிப்படையில், எவ்வித விசாரணையும் இன்றி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிக அளவிலான அதிகாரிகள் இடமாற்றம் என்பது, தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த உதவாது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால், முக்கிய பொறுப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் தேர்தல் ஏற்பாடுகளை விரைவாக செய்ய முடியாது.
எதிர்க்கட்சிகளின் தவறான அறிவுரைகள், தேர்தலை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் இந்த மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதிகாரிகள் நியமனம் தொடர் பான தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை தமிழக அரசு பின்பற்றி வருகிறது.
அதே நேரத்தில், தேர்தலுக்கு தொடர் பில்லாத, அரசு கேபிள் டிவி கழகத்தின் மேலாண் இயக்குநர் போன்றவர்கள் மாற்றப்பட்டது நடைமுறைக்கு எதிரான தாகும். பெரிய அளவில் அதிகாரிகளை மாற்றம் செய்து, ஆளும் அதிமுகவின் மீது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, உள்நோக்கத்துடன், அளிக்கப் பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுத்து தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அதிக அளவிலான அதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால், அதிகாரிகள் இடமாற்றத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.