

தனியார் நிறுவனங்களுக்கான பீச் வாலிபால் போட்டி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது.
‘தி இந்து' பத்திரிகை மற்றும் ரடிசன் ப்ளு ஹோட்டல் ஆகியவை இணைந்து இரண்டாவது முறையாக, 2014-ம் ஆண்டுகான பீச் வாலிபால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.
இது குறித்து ‘தி இந்து' பத்திரிகை யின் விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ் சீனிவாசன் வெள்ளிக் கிழமை கூறுகையில், “கடந்த ஆண்டு நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் 32 நிறுவனங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. அதில் சி.டி.எஸ். நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்தது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு தற்போது வரை 40 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது'' என்றார்.
நிகழ்ச்சியில் ‘தி இந்து' பத்திரிகை யின் ஸ்போர்ட்ஸ் செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.சூர்ய நாராயணன் போட்டிக் கான ஆடையை அறிமுகம் செய்து வைத்தார்.
போட்டிக்கு பதிவுக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யும் நிறுவனங்கள் 5 பேர் கொண்ட குழுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண் விளையாட்டு வீரர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஏப்ரல் 5-ம் தேதி சனிக்கிழமை ஆரம்பகட்டப் போட்டிகள் தொடங்கப் படும்.
இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை இறுதிக் கட்டப் போட்டி நடைபெறும். போட்டியில் முதலிடம் பெறும் குழுவினர் கோலாலம்பூர் அழைத்துச் செல்லப்ப டுவார்கள்.
இரண்டாம் இடம்பெறும் குழுவினர் ரடிசன் ப்ளு ஹோட்டலில் 3 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.