

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
முதல்வர் ஜெயலலிதா நாளை (செவ்வாய்க்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, திமுக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 'ஏற்காடு இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி பிரசாரம் செய்தார்.
மின்னம்பள்ளி பகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசு பொறுப்புகளில் உள்ளவர்கள் யாரும் வாக்குறுதிகள் அளிக்கக் கூடாது என்று என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். எனவே, முதல்வர், கல்வி அமைச்சர், கல்வித் துறை செயலாளர், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று திமுக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தது.
அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் பிரவீண் குமாரிடம், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமைக் கழக வழக்குரைஞர் பரந்தாமன் ஆகியோர் அளித்தது குறிப்பிடத்தக்கது.