

நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் சிலை வைத்ததை துரை முருகன் தவறான செயல் என உணர்கிறாரா என முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் எஸ்.செம்மலை முன்மொழிந்து, விவாதத்தை தொடங்கினார். அப்போது, ‘‘முதல்வரின் பெருந்தன்மை குறித்து எதிர்க்கட்சியினர் பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் 2 பேர் சிலைகளை வைப்பதற்கான வாய்ப்பு முதல்வருக்கு வந்தது. அப்போது அவர் தனது அரசி யல் ஆசான்களான அண்ணா, எம்ஜிஆர் சிலைகளை வைக்க அனுமதி பெற்றார். அதேநேரத் தில், திமுக தலைவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, முரசொலி மாறன் சிலையை வைத்தார்’’ என்றார்.
இதற்கு துரைமுருகன் எழுந்து பதிலளிக்க அனுமதி கேட்டார். திமுக உறுப்பினர்களும் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் ஜெய லலிதா குறுக்கிட்டு, ‘‘செம்மலை பேசும்போது நாடாளுமன்ற வளா கத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்தபோது, முந்தைய முதல் வரும் திமுக தலைவருமான கருணாநிதி, முரசொலி மாறனின் சிலையைத்தான் வைத்தார் என சொன்னார். அப்போது எதிர்க் கட்சிக்கு அவ்வளவு ஆவேசமும், கோபமும் வந்தது. துரைமுருகன் ஆவேசமாக எழுந்தார். அதைப் பார்க்கும்போது, முரசொலி மாறன் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்தது தவறான செயல், வெட்கப்படவேண்டிய செயல் என்று அவரே உணர்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது’’ என்றார்.