

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தில் சில குறைபாடுகள், சிக்கல்கள் உள்ளன. இவை சரிசெய்யப்பட்ட பிறகு, முழு வீச்சில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் கூறினர்.
அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவைகளைப் பெறும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், அஞ்சலகத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கான வேலைகள் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கின.
ஆனால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுத்தப்படவில்லை. ஊழியர்கள் இதை செயல்படுத்த சிரமப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக தமிழகத்தின் மத்திய அஞ்சல் வட்டத்தில் பணிபுரியும் அஞ்சல் உதவியாளர் ஒருவர் கூறியதாவது:
அஞ்சல் துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே புதுப்புது சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில், பாஸ்போர்ட் சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சேவையின்படி ஒருவருக்கு பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் நாங்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து, நேர்காணலுக்கான தேதியை உறுதிசெய்து தருகிறோம்.
இதை பிரவுசிங் சென்டரிலேயே செய்துகொள்ளலாம் என்றாலும், தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் இந்த சேவை அளிக்கப் படுகிறது.
இதனால் நிறைய பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஆனால் இந்த பணியை செய்ய ஊழியர்களுக்கு பிரத்தியேக பயனர் கணக்கு, கடவுச்சொல் (Unique User ID, Password) வழங்கப்படாததால், இந்த பணிகளை முழு வீச்சில் செய்யமுடிவதில்லை.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான வங்கி வரைவோலையை மக்கள் வெளியே வங்கிக்குச் சென்று எடுக்கவேண்டியுள்ளது.
இந்த திட்டம் சென்னை போன்ற முக்கிய அஞ்சல் வட்டங்களில் இன்னமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் துறை அதிகாரி மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘இதுபோன்ற சில சிக்கல்கள் காரணமாக, அஞ்சலகத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். வரைவோலைக் கான பணத்தை விண்ணப்பதாரர்கள் தபால் நிலையத்திலேயே செலுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாஸ்போர்ட் சேவா அதிகாரிகளிடம் பேச்சு நடத்திவருகிறோம். இந்த குறைகள் அனைத்தும் களையப்பட்ட பிறகு, இத்திட்டம் பரவலாக செயல்படுத்தப்படும்’’ என்றார்.