

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த 2 மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததாக ஒரு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை விசாரித்து வரும் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் இம்மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தனது வழக்கின் தீர்ப்பும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
எனவே, வழக்கு முடியும் வரை நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவியை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார் ஜெயலலிதா. அத்துடன் அவரது வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வரும் வழக்குரைஞர் பவானி சிங் நீக்கப்பட்டது தொடர்பாகவும் ஒரு மனுவை அவர் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக சேர்த்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் விசாரணை செய்து வந்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் நீதிபதிகள் சௌகான், எஸ்.ஏ. பாப்டே ஆகியோரைக் கொண்ட அமர்வு வழக்கின் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.