Published : 13 Jan 2017 03:57 PM
Last Updated : 13 Jan 2017 03:57 PM

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவராவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வராவிட்டால் மத்திய, மாநில அரசுகளை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்னால் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்டாலின் பேசியதாவது:

நம் தமிழர் திருநாளாக இருக்கக்கூடிய பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய இந்த நேரத்தில், ஒரு போராட்டக் களத்திற்கு வியூகம் அமைத்து, நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாம் நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால், நேற்றைய தினம் அதிர்ச்சி தரத்தக்க ஒரு செய்தி உச்ச நீதிமன்றத்தின் மூலமாக, இந்த தடையை உடனடியாக நீக்குவதற்கு எங்களால் முடியாது என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

தமிழர்களின் பண்பாட்டிற்கு, கலாச்சாரத்திற்கு ஒரு ஆபத்தை உருவாக்கக் கூடிய வகையில், அந்தச் செய்தி அமைந்திருக்கிறது. இளைஞர்களின் வீரத்திற்கு ஒரு அடையாளமாக, எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய, நம்முடைய தமிழினத்தின் பண்பாட்டின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்பதை இன்றைக்கு நாமெல்லாம் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 ஆண்டுகாலமாக தமிழகத்தின் ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. துரைமுருகன் எடுத்துச் சொன்னதுபோல, திமுகவின் ஆட்சிக் காலத்தில், தலைவர் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்று இருந்த நேரத்தில், அப்போதும் ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தது என்பதை மறுக்கவில்லை. தடையுத்தரவு வந்தது. உச்ச நீதிமன்றம் நடத்தக் கூடாது என்று உத்தரவு போட்டது.

ஆனால் அன்றைக்கு தலைவர் கருணாநிதி கையாண்ட வியூகத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் சில விதிகளை வகுத்துத் தந்து, அந்த அடிப்படையில் நீங்கள் ஜல்லிக்கட்டை நடத்தலாம், ஆனால் அந்த விதிமுறைகளில் இருந்து நீங்கள் கொஞ்சமும் மாறி விடக்கூடாது, என்ற அந்த உத்தரவின் அடிப்படையில், நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிமிடம் வரையில் ஜல்லிக்கட்டை பெருமையோடு நாம் நடத்திக் காட்டியிருக்கிறோம் என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன்.

ஆனால், ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது. அதன் பிறகு, எங்கள் ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடத்த நாங்கள் எந்தளவுக்கு விதிமுறைகளை கடைபிடித்தோமோ, அதை இவர்கள் செய்யவில்லை. அது உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. அதனால் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினை உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவினர் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின்போது விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை நேரடியாக பார்த்தார்கள். அதன் பிறகு அவர்கள் நிரந்தரமாக தடை போட்டார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

ஆனால் இதையெல்லாம் மூடி மறைத்து, ஏதோ மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தது, அந்த கூட்டணியில் திமுகவும் இடம்பெற்று இருந்தது, ஆக இவர்கள் தான் இதற்கு காரணம் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை பாஜகவும், அதிமுக அமைச்சர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒரு வாதத்திற்காக இதில் ஒன்றை ஏற்றுக் கொண்டு சொல்கிறேன், சரி நாங்கள்தான் இதற்கு காரணமாக இருந்தோம் என்றால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ஜல்லிக்கட்டை நடத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டார்களா? மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக ஆட்சி வந்த பிறகு, இதில் தலையிட்டு தடையை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்களா? என்றால் இல்லை.

நான் இன்னும் சொல்கிறேன், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, கடந்த முறை 5 வருடம் ஆட்சியிலிருந்த அதிமுக ஆட்சியின் போது, துரைமுருகன் போன்றவர்கள், என்னைப் போன்றவர்கள், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சட்டப்பேரவையில் எழுந்து, இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை பற்றி பேசிய நேரத்தில், அப்போது எதிரே, ஆளும் கட்சி வரிசையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் எழுந்து சென்ற ஆண்டு என்ன சொன்னார்? இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும், ஜெ. ஆணையிட்டு விட்டார், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம், உறுதியாக ஜல்லிக்கட்டு நடக்கும் என்று அறிவித்தார். அப்படி நடந்ததா என்று கேட்டால் இல்லை.

கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் இருக்கின்ற 234 சட்டமன்ற தொகுதிகளில் நமக்கு நாமே என்ற பெயரில் ஒரு சுற்றுப்பயணத்தை நடத்தினேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லாத்தரப்பு மக்களையும் சென்று சந்தித்தேன். குறிப்பாக, மதுரையில் உள்ள அலங்காநல்லூர் பகுதிக்கு நான் சென்றபோது, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தக்கூடிய வீரர்களோடு, இளைஞர்களோடு, காளையர்களோடு கலந்து பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நான் சொன்னேன், ஜல்லிக்கட்டை இந்த அரசு நடத்தாவிட்டால் மத்திய அரசை கண்டித்து, மாநில அரசுக்கு சுட்டிக்காட்டி, வலியுறுத்தி, வற்புறுத்தி, ஜல்லிக்கட்டை நடத்திட ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், அதற்கு நானே தலைமைத் தாங்குவேன், தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, அனுமதி பெற்று அந்த போராட்டத்தை நடத்துவோம், என்று நான் அறிவித்தேன்.

அதன் பிறகு தலைவர் கருணாநிதியைச் சந்தித்து இந்தப் பிரச்சினை பற்றி சொன்னேன். உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என்று அவர் ஆணையிட்டார். உண்ணாவிரதப் போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான், மத்தியில் இருக்கக்கூடிய தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்கு ஒரு செய்தி அனுப்புகிறார். என்ன செய்தி என்று கேட்டால், நிச்சயமாக ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்கும், நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை, போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று பணிவோடு நான் கேட்கிறேன் என்று ஒரு அறிக்கையை, கடிதத்தை அனுப்பி வைக்கிறார்.

அதனைப் படித்துப் பார்த்த கருணாநிதி, அந்த உறுதிமொழியை நம்பி, அதை ஏற்றுக் கொண்டு, அதன் பிறகு எங்களைப் போன்றவர்களை அழைத்து, உறுதிமொழி வந்திருக்கிறது, எனவே பொறுத்திருப்போம், மத்தியில் அமைச்சராக இருக்கக்கூடிய பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார், எனவே, உண்ணாவிரதத்தை ஒத்தி வையுங்கள் என்று எங்களுக்கு ஆணையிட்டார். ஆகவே, உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு நடந்ததா என்று கேட்டால் இல்லை.

அதன் பிறகு, இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற ஏக்கப் பெருமூச்சோடு, திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுக்கின்றன, போராடுகின்றன, வாதாடுகின்றன. தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டை நடத்தக்கூடிய வீரர்கள், காளையர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இன்றைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். போராடிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக கடந்த ஐந்தாறு நாட்களாக தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் எல்லாம் கிளர்ந்து எழுந்திருக்கின்றார்கள்.

எப்படி 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு எப்படி மொழிப்போர் காரணமாக அமைந்ததோ, இளைஞர்கள் கிளர்ந்து எழுந்த காரணத்தால், அந்தப் போராட்டத்தை ஒரு வெற்றி போராட்டமாக நாம் நடத்திக் காட்டினோமே, அதேபோல இன்றைக்கு இளைஞர்கள் கிளர்ந்து எழுந்திருக்கின்றார்கள்.

இந்த ஆண்டும் மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவோம், கவலைப்பட வேண்டாம் என்று தான் நேற்று முன் தினம் வரையிலும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நேற்றைக்கு முன் தினம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கருத்தினை சொல்லியிருக்கிறார். 'போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு அனுமதி கிடைக்கப் போகிறது. ஆக, அப்படி அனுமதி கிடைக்கின்றபோது திராவிட இயக்கங்கள் எல்லாம் அழிந்து போய்விடும்' என்று அவர் ஒரு வாழ்த்துச் செய்தியை சொல்லி இருக்கிறார்.

இதை பத்திரிகை நிருபர்கள் என்னிடம் சொல்லி, திராவிட இயக்கமே அழிந்து போய் விடும் என்று சொல்கிறாரே, என்று கேட்டபோது, நான், 'திராவிட இயக்கத்தை அழிப்பதல்ல, யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது', என்று நான் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னேன்.

நேற்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து, உடனடியாக அனுமதி வழங்க முடியாது, என்ற ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது என்று சொன்னால், உடனே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்திருக்க வேண்டும்? ஐதராபாத்துக்கு சென்றாரே, அங்கிருந்து நேராக டெல்லிக்கு சென்றிருக்க வேண்டுமா, வேண்டாமா? டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்திருக்க வேண்டாமா, வேண்டாமா? ஏன் அந்தப் பணியை செய்யவில்லை?

தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவின் சார்பில் 50 எம்.பி.க்கள் இருக்கிறார்களே, அவர்கள் என்ன செய்கிறார்கள்? நேற்று முன் தினம் சென்றதாக பதில் சொல்வார்கள். போனது உண்மைதான் என்பதை மறுக்கவில்லை. காவிரி பிரச்சினை வந்த நேரத்திலும் போனார்கள். ஆனால் போனவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிந்ததா? காவிரி பிரச்சினையிலாவது பிரதமரை சந்தித்தார்களா? இல்லையே.

ஆனால், மோடி யாரை சந்திக்கிறார் என்று கேட்டால், அவருக்கு வேண்டியவர்கள், அதுவும் சினிமா உலகத்தினர் வந்தால் உடனே அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து சந்திக்கிறார். நான் காலையில் ஒரு பட்டியலை எடுத்தேன். சொல்வதற்கே வெட்கப்படுகிறேன். யார், யாரை எல்லாம் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் தெரியுமா? கவுதமி, பிரபாஸ், சோனாலி, நாகார்ஜூனா, சல்மான்கான், அமீர் கான், ரஜினிகாந்த், விஜய், காஜோல்,சைப் அலிகான், கரினா கபூர். நான் இவர்களை எல்லாம் விமர்சித்துப் பேசுவதாக நினைத்து விடக்கூடாது. இவர்களுக்கு என்று ஒரு தனி பெருமை, புகழ் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை.

நான் கேட்கின்ற ஒரே கேள்வி, சினிமா நட்சத்திரங்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களை பார்க்க நேரம் ஒதுக்கும் மோடி , நம்முடைய பண்பாட்டின் சின்னமாக இருக்கக்கூடிய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கு 50 எம்.பி.க்கள் வரும்போது நேரம் ஒதுக்கி தந்திருக்க வேண்டாமா? சரி உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் வந்து விட்டார்கள் என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சரி, அவர்களை நாளை வாருங்கள், இன்னொரு தேதியில், இந்த நேரத்தை குறிப்பிட்டுச் சொல்லி, அந்த நேரத்தில் வாருங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா?

திமுகவின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க, கடிதம் மூலமாக, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நேரம் கேட்டு எவ்வளாவு நாட்கள் காத்திருந்தோம்? நேரம் கொடுக்கப்பட்டதா? இல்லை. அதன் பிறகு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பிரச்சினையை எடுத்துச் சொல்லிவிட்டு வந்தார்கள்.

ஆக, தமிழகத்தின் பிரச்சினையாக இருந்தால், அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, பிரதமர் இன்றைக்கு நேரம் கொடுக்க, சந்திக்க மறுக்கிறார் என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்? அதே நேரத்தில், நாங்கள் இப்படி நேரம் கேட்டிருக்கிறோம், என்று சொல்லும் தெம்பு, திரானி அதிமுகவிற்காவது இருக்கிறதா என்று கேட்டால், இல்லையே. 50 எம்.பி.க்கள் நினைத்தால் முடியாதா? மிரட்ட முடியாதா? ஏன் அந்த காரியத்தை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்?

நீங்கள் பார்க்கலாம், இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு எத்தனையோ காரணங்களை நாம் சொல்கிறோம். அதில் ஒரு முக்கியமான காரியமாக, விலங்குகள் நல வாரியத்தை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதுதான் இன்றைய பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணம். அப்படி டிஸ்மிஸ் செய்துவிட்டு, புதிய கமிட்டி அமைக்கின்றபோது, அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நிச்சயமாக நியமிக்கப்பட வேண்டும். அப்படி கேட்டால், அதை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை, என்று மத்திய அரசு பதில் சொல்லலாம். ஆனால், திட்டக் கமிஷனையே டிஸ்மிஸ் செய்த ஆட்சிதான் பாஜக ஆட்சி. இப்போது ஏன் செய்ய முடியாது?

விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்கள், தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும், என்று சொல்லக்கூடிய தைரியம் இன்றைக்கு எப்படி வந்தது? இதற்கு முதல்வராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் என்ன விளக்கம் சொல்லப்போகிறார்?

ஆக, நம்முடைய தமிழ் பண்பாட்டை காப்பாற்றுவதற்காக ஒரு அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திட வேண்டும், அதற்கான உரிய அழுத்தத்தை மாநில அரசு தந்திட வேண்டும், என்று தான் போராடுகிறோம்.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிறது, இந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த முடியாமல் தடை போடப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், நாளைய தினம் பொங்கல், இடையில் இன்னும் ஒரு தினம் தான் இருக்கிறது, ஆனாலும், இப்போது கூட குடி முழுகி போய் விடவில்லை. நேரம் கடந்து போய்விடவில்லை. இடையில் உள்ள இந்த ஒரு நாளில் மத்திய அரசினால் அவசர சட்டத்தை நிச்சயம் கொண்டு வரமுடியும்.

இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், சில நாட்களுக்கு முன்பு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் அணில் மாதவ் தவே ஒரு செய்தியை சொல்லி, அந்த செய்தி இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், தீர்ப்பு வந்த பிறகு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நள்ளிரவில் கூட எங்களால் முடிவெடுக்க முடியும், என்று சொல்லியிருக்கிறார்.

எனவே, மத்திய அமைச்சரிடமும், பிரதமர் மோடியிடமும், நான் பணிவோடு கேட்கிறேன், உரிமையோடு கேட்கிறேன், உணர்வோடு கேட்கிறேன், இங்கு குழுமியிருக்கக்கூடிய மக்களின் சார்பில் கேட்கிறேன், தமிழர்களின் சார்பில் கேட்கிறேன், உடனடியாக அவசர சட்டத்தைக் கொண்டு வாருங்கள். அப்படி கொண்டு வரத் தவறினால், உங்களையும் மத்திய அரசையும், தமிழக அரசையும் இந்த மாநிலத்தின் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x