

இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னை சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா, கொடியசைத்து மெட்ரோ ரயிலை தொடங்கிவைத்தார். விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை, பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களையும் காணொலி காட்சி மூலம் அவர் திறந்துவைத்தார். விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையான 10.15 கி.மீ. உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவையை கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கி வைத்தேன். அதன் தொடர்ச்சியாக முதல் வழித்தடத்தில் 8.6 கி.மீ. தொலைவு கொண்ட விமான நிலையம் - சின்னமலை இடையிலான உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கோயம்பேடு இணைப்பு
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அனுமதி அளித்ததும், ஆலந்தூர் - பரங்கிமலை இடையே 1.28 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். கோயம்பேடு- பரங்கிமலை இடையே ரயில் இயக்கம் தொடங்கினால், பரங்கிமலை புறநகர் ரயில் சேவை, கோயம்பேடு வெளியூர் பேருந்து சேவை ஆகியவை இணைக்கப்படும்.
கனவு நனவாகும்
ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இணைப்புப்பாதை (லூப் லைன்) வசதி வெகு விரைவில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், ஆலந்தூரில் வந்து ரயில் மாற வேண்டிய நிலை இருக்காது. ஒரே ரயிலில் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் சென்று வரலாம். இந்த முயற்சிகள் மூலம், 21-வது நூற்றாண்டில் நவீன நகரமாக சென்னை மாறும் என்ற என்னுடைய கனவு நனவாகும் என நம்புகிறேன். பேருந்து, புறநகர் ரயில் சேவை, விமான நிலைய சேவை, மெட்ரோ ரயில் மற்றும் இறுதியாக மோனோ ரயில் சேவைகள் இணைக்கப்படும் போது சென்னையின்பொது போக்கு வரத்து பகிர்வு கணிசமாக மேம்படும்.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உதவி வருவதும், இந்த நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாகும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் தொடர்ந்து உதவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழகத் துக்கு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து கொண்டுவர முயற்சிக்கிறார்.
ஜப்பானுக்கு நன்றி
இந்தியா மற்றும் தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கான பங்குதாரராக ஜப்பான் விளங்குகிறது. ஜப்பான் தூதர், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜைகா) அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக் கிறது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங் களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் ஜப்பான் அரசுக்கும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மெட்ரோ ரயில் முதல்திட்ட விரிவாக்கம், 2-வது திட்டம் ஆகியவற்றுக்கு ஜைகா தொடர்ந்து உதவும் என உறுதியாக நம்புகிறேன். சென்னை அருகே அமைக்கப்படும் தினமும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை புறவட்டச்சாலை திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலீட்டு வளர்ச்சி 2-ம் கட்ட திட்டம் ஆகிய மிக முக்கிய திட்டங்களுக்கு ஜைகா உதவ வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன்.
மெட்ரோ சுரங்கப்பாதையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜப்பான் தூதர் சைஜி பாபா, ஜைகா நிறுவன தலைமை பிரதிநிதி டகேமா சுகமோடோ, துணை தலைமை பிரதிநிதி ஹிரோஷி யோஷிடா, தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.