

சூளைமேட்டில் காரில் ரூ.2 கோடி மதிப்புள்ள பழைய 1000, 500 நோட்டுகளை கொண்டு சென்ற வழக்கறிஞரை வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சென்னை சூளைமேட்டில் நேற்று இரவில் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.2 கோடி மதிப்புள்ள பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை காரில் கொண்டு சென்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவக் குமரனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சூளைமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.