Published : 30 Oct 2014 08:16 AM
Last Updated : 30 Oct 2014 08:16 AM

ஜாமீனில் விடுதலையான பிறகு முதல்முறையாக முதல்வர், அமைச்சர்களுடன் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜாமீனில் விடுதலை யாகி வந்து 11 நாட்களுக்குப் பின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் போயஸ் கார்டனில் நேற்று 2 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த 18-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். போயஸ் கார்டனுக்கு வந்ததில் இருந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது விடுதலைக்காக உயிர் துறந்தோருக்கு நிவாரண உதவி அறிவித்தார். கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில், ‘இறை அருள் எனக்கு எப்போதும் துணை இருக்கும். சோதனைகளை கடந்து வெற்றி பெறுவேன்’ என அறிக்கை வெளியிட்டார்.

தீபாவளிக்கு முன்பும், பிறகும் ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டு, அவர் யாரையும் சந்திக்காமல், வீட்டிலேயே பிரார்த்தனை மற்றும் புத்தகங்கள் படிப்பதுமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, முக்கூர் சுப்பிரமணியன், கோகுல இந்திரா, வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார், என்.சுப்ரமணியன், ரமணா, சின்னையா மற்றும் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 16 பேரை மட்டுமே சந்திக்க நேற்று அனுமதி அளித்தார்.

2 மணி நேரம் சந்திப்பு

இதையடுத்து, நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு போயஸ் கார்டனுக்குள் சென்ற முதல்வரும் அமைச்சர்களும் மாலை 4 மணிக்கு வெளியே வந்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. முதலில் முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை தனியாகவும், பின்னர் சில அமைச்சர்கள் தனித்தனியாகவும் சந்தித்து பேசியதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்களை செயல் படுத்துதல், எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு பதிலளித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஜெயலலிதா சில வழிகாட்டுதல்களை அளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கனிம முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், யாருடனும் போட்டியில்லாத நிலையில், மக்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், முதல்வர் மற்றும் அரசு ஆலோசகரின் வழி காட்டுதல்களை சரியாக கடை பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து பேசப்பட்டதாகவும், ஜெயலலிதா ஆலோசனையின்பேரில் பால் விலை மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரி வித்தன.

மழை நிவாரண நடவடிக்கை

தானே புயல் மற்றும் சுனாமி தாக்குதலின்போது எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகள் போல, தற்போது மழை நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜெயலலிதா அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x