

அண்ணா சாலையில் உள்ள ஹோட்டல்கள் சாலையை ஆக்கிரமித்து தங்களது கார் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர்ஸ் எதிரே புஹாரி, திண்டுக்கல் தலப்பாகட்டி, சென்னை ராவுத்தர் தலப்பாகட்டு, ஹோட்டல் மாஸா, காபி ஹவுஸ், ஹோட்டல் சங்கம் என 6 ஹோட்டல்கள் அடுத்தடுத்து உள்ளன. இதேபோல அண்ணா சாலையில் அண்ணா சிலை எதிரே சரவணபவன் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கார்களை அண்ணா சாலையிலேயே விடுகின்றனர். மேலும், 2 அடுக்கு பார்க்கிங்காகவும் இவர்கள் கார்களை நிறுத்துகின்றனர். இதனால் அந்த இடத்தில் அண்ணா சாலையின் அகலம் பாதிக்கும் கீழே குறைந்து, ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவுக்கு இடைவெளி உள்ளது. இதனால் அந்த இடத்தில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்வதற்கு கடுமையாக சிரமப்படுகின்றனர்.
மேலும், சாலையை ஆக்கிர மித்து கார்களை நிறுத்துவதற்கு, ஒவ்வொரு ஹோட்டல் நிர்வாகமும் தனித்தனியாக ஆட்களை அங்கே நிறுத்தியுள்ளனர்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்கள் கார்களை எடுக்கும்போது, அண்ணா சாலையிலேயே அதை திருப்பு கின்றனர். இதனால் அங்கு மேலும் போக்குவரத்து நெருக் கடி ஏற்படுகிறது. அந்த ஹோட்டல்கள் நடைபாதையையும் ஆக்கிரமித்து இருப்பதால் நடந்து செல்பவர்களும் அந்த இடத்தில் கடுமையான சிரமங்களை சந்திப்பார்கள். இத்தகைய ஒழுங்கீனம் தினமும் அங்கே நடக்கிறது. அந்த வழியாக செல்லும் அனைவருக்கும் இது தெரியும்.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அண்ணா சாலை போக்குவரத்து பிரிவு போலீஸார் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அண்ணா சாலை காதி அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்துபவர்களிடம் அதே போக்குவரத்து போலீஸார் கறாராக அபராதம் வசூல் செய்கின்றனர். இந்த முரண்பாடு குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் கேட்டபோது, “ஹோட்டல்களால் வாகன நெருக்கடி பிரச்சினையே இல்லை” என்று அப்பட்டமாக உண்மையை மறைத்து கூறினர்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் சிலர் கூறும்போது, “இந்த பகுதியில் உள்ள 3 காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் பலருக்கும், போக்குவரத்து போலீஸாரில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த ஹோட்டல்களில் இருந்து தான் தினமும் உணவு கொடுக்கப்படுகிறது. இது எங்களுக்கு நன்றாக தெரியும். பணம் கொடுக்கப்படுவது குறித்து எங்களுக்கு தெரியாது” என்றனர்.
போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது, உடனடியாக இதில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பார்க்கிங் அவசியம்
பொதுமக்கள் கூறும்போது, "லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹோட்டல்காரர்கள் பார்க்கிங் வசதியுடன் கட்டிடங்களை கட்ட வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத ஹோட்டல்களுக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.