Published : 22 Apr 2016 12:54 PM
Last Updated : 22 Apr 2016 12:54 PM

மதுவிலக்கு அமல்படுத்துவதில் திமுக, அதிமுக ஏமாற்று நாடகங்கள்: ராமதாஸ் கடும் விமர்சனம்

"மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். மதுவிலக்கு குறித்து அக்கட்சிகள் பேசுவதெல்லாம் ஏமாற்று நாடகங்கள் தான். மது விற்பனையைப் பொறுத்தவரை இரு கட்சிகளும் அறிவிக்கப்படாத கூட்டணி அமைத்திருக்கின்றன" என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மது குடித்தவர்களை குழம்பச் செய்யும்; ஒரு விஷயத்தை மாற்றி மாற்றி பேச வைக்கும் என்பது மருத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால், மதுவிலக்கு பற்றி பேசுவதிலேயே தி.மு.க. குழம்பியிருக்கிறது. மது விலக்கு குறித்த நிலைப்பாடு பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி, தங்களின் இரட்டை நிலையை தேர்தலுக்கு முன்பாக தமக்குத்தாமே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 10-ஆம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு ஆணையில் தான் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் அதற்கு மாறாக, சட்டம் இயற்றிய பிறகு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருப்பது ஏமாற்று வேலை.

மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தப்போவதில்லை என கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன்.

அதற்கு பதிலளிக்காத கருணாநிதி, நான் கூறிய அதே குற்றச்சாற்றை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியதும் அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

அதிலும் கூட, "தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்துவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய பிறகும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே தி.மு.க.வுக்கு இல்லை என்று பேசுவதா?" என்று வினா எழுப்பி பழைய பல்லவியையே கருணாநிதி மீண்டும் பாடியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கான பொருள் என்ன? என்பது தான் கலைஞருக்கு நான் எழுப்பும் வினா. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது எப்போதோ முடிவாகிவிட்ட ஒன்று.

ஆனாலும், இந்த வினாவை நான் எழுப்புவதன் நோக்கம் மதுவிலக்கு தொடர்பான விஷயத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்தும் நாடகங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்பது தான்.

சட்டப்பேரவையில் சட்டம் இயற்றித் தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதுதான் தி.மு.க.வின் நோக்கம் என்றால், மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் போது "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையில் தான்" என்று சென்ற இடங்களில் எல்லாம் வீராவேசமாக முழங்கியது என்ன ஆயிற்று?

ஒருவேளை ஸ்டாலின் கூறியபடி முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்க வேண்டும்.

ஏனெனில், தி.மு.க.வின் கடந்த காலம் அப்படி. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்து அத்தனை முறையும் அதைக் காற்றில் பறக்கவிட்ட பெருமை தி.மு.க.வுக்கு உண்டு.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் வணிகர்களை கைவிட மாட்டோம் என்று கருணாநிதி நம்பிக்கையளித்த அடுத்த வாரமே, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்து வணிகர்களை படுகுழியில் தள்ளிய பெருமையும் தி.மு.க.வுக்கு உண்டு. அதனால் தான் கலைஞரிடம் விளக்கம் கேட்கிறேன்.

ஆனால், இந்த வினாக்களுக்கு கருணாநிதி பதிலளிக்க மாட்டார். காரணம், அவரிடம் இவற்றுக்கு பதில் இல்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

இந்த இரு கட்சிகளுமே மதுவிலக்குக்கு எதிரான, மதுவுக்கு ஆதரவான கட்சிகள் தான். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 09.04.2016 அன்று ஜெயலலிதா அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் அதிமுகவின் நிலைப்பாடு.

அதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 20.07.2015 அன்று கருணாநிதி அறிவிக்கும் வரை மது ஆதரவு தான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று கடந்த 21.01.2016 அன்று சட்டப்பேரவையில் அறிவித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எப்படி உறுதி செய்தாரோ?

அதேபோல் தான் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமல்ல என்று 08.03.2015 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்து தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஸ்டாலின் உறுதி செய்தார். இதுதான் இந்த கட்சிகளின் உண்மை நிலை. இது ஒருபோதும் மாறாது.

உண்மையில், மது விற்பனையைப் பொறுத்தவரை இரு கட்சிகளும் அறிவிக்கப்படாத கூட்டணி அமைத்திருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளில் 50.68 விழுக்காடும், பீர் வகைகளில் 61.52% விழுக்காடும் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்பதிலிருந்தே இந்த கூட்டணியின் பிணைப்பை உணரலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. மற்றும் அதிமுகவினர் நடத்தும் மது ஆலைகளுக்கு மட்டும் ரூ.70,000 கோடி வருமானம் கிடைத்துள்ள நிலையில், அதை இழக்க இரு கட்சிகளுக்கும் மனம் வராது. மதுவிலக்கு குறித்து அக்கட்சிகள் பேசுவதெல்லாம் ஏமாற்று நாடகங்கள் தான்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் திறனும், விருப்பமும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உண்டு.

இதை தமிழ்நாட்டு மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். மே 19 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மக்களின் இந்த விருப்பம் பிரதிபலிப்பது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x