Published : 21 Sep 2015 04:38 PM
Last Updated : 21 Sep 2015 04:38 PM

எங்கள் அணியால் அரசியல் மாற்றம் உறுதி: ஜி.ராமகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நல கூட்டு இயக்க கூட்டணி ஓர் அரசியல் மாற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது என்றும், இந்த மாற்று உருவாவதை யாராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த அரசியல் மாற்றத்துக்காகவே மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆண்டுவந்திருக்கும் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்று உருவாவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் தேவையை நாளடைவில் மக்களும் உணர்ந்து வருகிறார்கள்.

ஊழல், மக்களின் பொருளாதார வாழ்க்கையை சீரழித்துவரும் நவீன தாராளமய கொள்கை, தீண்டாமைக்கொடுமை, மதவாதம் என நான்கு விதமான அபாயங்களை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைகள் தமிழக மக்களின் நிகழ்காலத்தை சிதைத்துவருவதுடன் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மேற்கொண்ட போராட்டம் பரவலாகப் பேசப்பட்டது. பிஆர்பி கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து புதைகுழியை தோண்டச் சொல்லியிருக்கிறார் சகாயம். காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால் இரவெல்லாம் அங்கேயே தங்கி எலும்புக்கூடுகள் எடுக்கப்படும் வரை அமர்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. பொதுமக்களும், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளை சார்ந்தவர்களுமே அவருக்கு உதவியாக இருந்துள்ளனர்.

கிரானைட், ஆற்று மணல், தாது மணல் கொள்ளையின் அளவு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்கின்றனர். இத்தகைய ஊழல்கள் திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளிலும் நடைபெற்றுள்ளன.

மிகப்பிரம்மாண்டமான வியாபம் ஊழல், லலித்மோடி தப்பிக்க உதவி செய்தது உள்ளிட்ட ஊழல்களில் பாஜகவின் முக்கிய அமைச்சர்களும் முதல்வர்களும் சிக்கியுள்ளனர். இவற்றிற்கெதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராடின.

தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, பாமக உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தனர். இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மீதே ஊழல் வழக்குகள் நடந்து வருவதும், சிபிஐ-யின் விசாரணை வளையத்தில் இருப்பதும்தான் இதற்குக் காரணம்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்ததும், பின் விடுதலை பெற்று மீண்டும் முதல்வரானதும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு விசாரணையில் உள்ளதும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் நாணி தலை குனிய வைக்கும் அம்சங்கள். திமுக தலைமையின் உறவுகள் ஊழல் வழக்குகளை சந்தித்துவருகின்றன. தலைமையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு அந்தக் கட்சியின் அடிக்கிளைகள் வரை பரவியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்ஞிகளும் அரங்கேற்றிய திருமங்கலம், ஸ்ரீரங்கம் தொகுதி பார்முலா தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இவற்றை மாற்றிடவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா உள்ளிட்ட ஊழல் தடுப்பு ஏற்பாடுகள் மற்றும் வெளிப்படை தன்மையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் ஒரு மாற்று அரசியல் தேவைப்படுகிறது.

பெரியார், சிங்காரவேலர், ஜீவா, பி.சீனிவாசராவ் போன்றோர் நடத்திய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் தமிழ் சமூக சூழலை மாற்றியமைத்தன. இன்றோ, சாதி ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அணிகரித்துவருகிறது. ஒருவரது திருமணம் குறித்து முடிவு செய்யும் தனி மனித உரிமையில் திரட்டப்பட்ட சாதி அமைப்புகள் தலையிட்டு அதை சாதி மோதலுக்கான மையப்புள்ளியாக மாற்றுகின்றன.

கடவுளுக்காக கட்டப்பட்ட தேரில் சாதிவெறி ஊர்வலம் வருகிறது. இப்படி ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உயிரோடு விளையாடும் சாதி வெறியை அதிமுகவும், திமுகவும் வேடிக்கை பார்க்கின்றன.

அண்மையில் திருச்செங்கோட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஒரு தலித் என்பதால் உயரதிகாரிகள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி வந்துள்ளனர். இது குறித்து கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளரும் அவரது தோழியுமான மகேஸ்வரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழக சிபிசிஐடி விசாரணை மூலம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. தேர்தல் வெற்றியை மட்டும் மனதில் வைத்துள்ள அவர்களது அரசியல், மக்களை சாதி, மத வாக்கு வங்கிகளாக பிரிக்கவே உதவியாக உள்ளது. சாதி ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவதும், மத நல்லிணக்கம் காத்து மக்கள் ஒற்றுமையை உயர்த்திட ஒரு மேம்பட்ட அரசியலை கொடுப்பதற்கும் கொள்கை அடிப்படையிலான மாற்று அவசியமாகும். இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடும் திமுக, அதிமுக ஆட்சிகளில் தான் பெட்டி கொடுப்போருக்கே வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ், பாஜகவோடு மத்தியில் ஆட்சியில் பங்குபெற்றதோடு மத்திய அரசின் அடியொற்றி காங்., பாஜக கடைப்பிடித்த பல மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை தமிழகத்தில் இக்கட்சிகள் தொடர்ந்து பின்பற்றுகின்றன.

இவ்வாறு தமிழகம் சந்தித்துவரும் மிக முக்கியமான பிரச்சனைகளின் வேர் திமுக, அதிமுகவின் கடந்த கால, நிகழ்கால செயல்பாடுகளில் அமைந்துள்ளது என்பதே உண்மையாகும். ஆட்சி, அதிகாரம் இவைகளைப் பயன்படுத்தி ஊழல் என்பதே இலக்கு என்று மாறிவிட்ட இக்கட்சிகளுக்கு இத்தகைய கொள்கை சார் நிலைமைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது விரக்தியை வெளிப்படுத்தி, தங்கள் அணிக்கு வராத கட்சிகளின் முக்கியமானவர்கள் அதிமுகவால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவதூறு செய்துள்ளார்.

இத்தகைய கொள்முதலில் திமுக தலைவர் கரைதேர்ந்தவர் என்பதை நாடறியும். அதிமுகவில் இருந்தபோது சுடுகாட்டுக் கூரையில் கூட ஊழல் செய்து அம்பலப்பட்டுப் போன செல்வகணபதியை திமுக தலைமை அப்படியே கொள்முதல் செய்து கொண்டதும், அதற்காக மாநிலங்களவை பதவி கொடுத்து பேரத்தை நிறைவு செய்து கொண்டதும். இப்போது செல்வகணபதி சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளிலும் திமுக இறங்கியது. பின்னர் மதிமுகவின் சில நபர்களை கொள்முதல் செய்து மிரட்டலில் இறங்கியுள்ளது.

இந்தக் கொள்முதலுக்கு முன்னதாக திமுக தலைவர் கூட்டணியை உடைக்க நினைப்பவர்கள் உடைந்து போவார்கள் என்று சொன்னதை கவனத்தில் கொண்டால் கொள்முதல் செய்வது யாரென்று புரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் போட்டியிட்டவர்களில் ஏழு பேர் இவ்வாறு கட்சி மாறியவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்று உருவாவதை திமுகவோ, அதிமுகவோ எந்தக் காலத்திலும் விரும்பியதில்லை. அத்தகைய சக்திகளை பலவிதமான ஜாலங்களின் மூலம் உடைப்பதற்கே முயன்றுள்ளனர்.

2011-ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சியானது. சில மாதங்களில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதிப் பிரச்சனைக்காக சந்திக்கத் தொடங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தேமுதிக உறுப்பினர்களாக இன்னும் சட்டப்பேரவையில் இருக்கும் ஏழு உறுப்பினர்கள் தங்களது பிராண்ட் எப்போது மாறும் என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மக்களை மையப்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த, மக்கள் நல கூட்டு இயக்கத்தை மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க முயற்சித்துவருகின்றன.

இத்தகைய மாற்றத்தை திமுக, அதிமுக எப்போதும் விரும்பியதில்லை. இத்தகைய ஜாலங்களைச் செய்வதன் மூலம் சில நாள் அரசியல் விவாதங்களுக்கு அவல் ஆகலாமே தவிர தமிழக மக்கள் நலனுக்கான மாற்று உருவாவதை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x