

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் நாளை (சனிக்கிழமை) அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக நகர்ப்புற செயலர் டி.ரவீந்திரன் இதனை தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கைது செய்யபப்ட்ட ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் இருந்து விரைவில் விடுபட வேண்டும் என அதிமுகவினர் அனைவரும் விரும்புகிறோம். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பந்த நடத்துவது என கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் என அனைத்துப் பகுதிகளிலும் பந்த் நடத்தப்படும். பேருந்து, ஆட்டோக்கள், ரயில் சேவை பாதிக்கப்படும் என டி.ரவீந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவருடன் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் இருந்தனர்.
அதிமுக அழைப்புள்ள விடுத்துள்ள பந்த்துக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.