சென்னை வாக்காளர்கள் 40 லட்சமாக உயர்வு: எண்ணிக்கை ஓராண்டில் 1 லட்சம் அதிகரிப்பு

சென்னை வாக்காளர்கள் 40 லட்சமாக உயர்வு: எண்ணிக்கை ஓராண்டில் 1 லட்சம் அதிகரிப்பு
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 58 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 2017 ஜனவரி 1-ம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்டார்.

40 லட்சம் வாக்காளர்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 39 லட்சத்து 87 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 58 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 லட்சத்து 6 ஆயிரத்து 36 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 51 ஆயிரத்து 598 பெண் வாக்காளர்களும், 968 மூன்றாம் பாலினத்தவரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 71 ஆயிரத்து 243 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள்

சென்னை மாநகரப் பகுதியில் இடம்பெற்றுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் துறைமுகம் தொகுதி யில்தான் மிகக் குறைவான வாக் காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 956 வாக்காளர்கள் உள்ளனர். 3 லட்சத்து 5 ஆயிரத்து 176 வாக்காளர்களுடன் வேளச்சேரி தொகுதி முதலிடத்தில் உள்ளது.

1 லட்சம் பேர் சேர்ப்பு

கடந்த ஆண்டு ஜனவரியில் வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 39 லட்சத்து 47 ஆயிரத்து 16 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 586 வாக்காளர்கள் அதிகரித்து, 40 லட்சத்து 58 ஆயிரத்து 602 வாக்காளர்களாக உயர்ந்துள்ளனர்.

தகுதியின்மை

செப்டம்பர்-அக்டோபர் மாதங் களில் நடைபெற்ற வாக்காளர் பட்டி யல் திருத்தும் பணியின்போது, பெயர் சேர்த்தல் தொடர்பாக 84 ஆயிரத்து 27 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 82 ஆயிரத்து 666 மனுக்கள் ஏற்கப்பட்டு, 1361 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பெயர் நீக்கல் படிவம் பெற்றும், தகுதியின்மை காரணமாகவும் 11 ஆயிரத்து 339 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் 18 வயது நிரம்பிய முதன்முதலாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக் காளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 131 ஆகும்.

பொதுமக்கள் பார்வையிடலாம்

புதிய வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பார்க்கலாம். இறுதிப் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான அடையாள அட்டைகள், தேசிய வாக்காளர் தின மான வரும் 25-ம் தேதி சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in