ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜன.9-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜன.9-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேமுதிக சார்பில் வரும் 9-ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்று, காளையை அடக்குகின்ற தமிழக இளைஞர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிக்கைகள் மூலமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தெரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனவே தேமுதிக சார்பில் வரும் 9-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், வாடிவாசல் அருகில் காலை 10 மணியளவில், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதற்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்துகொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in