இலங்கை மீனவர்களுக்கு நீதிபதி அறிவுரை
தமிழக மீனவர்களையும் கண்ணியமாக நடத்தச் சொல்லுங்கள் என சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை மீனவர்களிடம் தலைமை குற்றவியல் நடுவர் சந்திரன் அறிவுறுத் தினார்.
நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கடந்த மார்ச் 7-ம் தேதி இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 10 பேரையும் நேற்று போலீஸார் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி சந்திரன், அந்த மீனவர்களிடம் “உங்களை தமிழக போலீஸார் முறையாக கண்ணியமாக நடத்தினார்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் “ஆமாம்” என்றனர்.
அதையடுத்து அவர், “இதேபோல தமிழக மீனவர்களையும் உங்கள் நாட்டில் கண்ணியமாக நடத்தச் சொல்லுங்கள்” எனக்கூறி அவர்களை வரும் மார்ச் 23 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
