

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்வது மற்றும் அப்பணியாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம்-2013 குறித்த விழிப்புணர்வு கூட்டம், சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கிவைத்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
போதிய பயிற்சி இன்றி, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சென்னையில் இதுவரை 52 பேர் இறந்துள்ளனர். வணிகரீதியில் செயல்படும் நிறுவனங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டால் குடிநீர் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து உரிய கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற்ற குடிநீர் வாரிய தொழிலாளர்களைக் கொண்டே அடைப்பு நீக்க வேண்டும். அவரவருக்கு தெரிந்த, போதிய பயிற்சி இல்லாத நபர்களை பயன்படுத்த கூடாது. குறைந்த செலவுக்காக, அவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.
மழைக் காலங்கள் தவிர மற்ற நேரங் களில் மழைநீர் வடிகாலில் நீர் வந்தாலோ, கருப்பு நிறத்தில் நீர் சென்றாலோ பொது நலச் சங்கங்கள் மாநகராட்சி கவனத் துக்கு கொண்டு வாருங்கள். அது, சட்டவிதோரமாக மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடுவதால் ஏற்படுவது. அவ்வாறு விடப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வீடு அல்லது நிறுவனத்தை மூடி சீல் வைக்கப்படும்.
சென்னையில் இதுவரை மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி செய்து வந்த 252 பேரை அடையா ளம் கண்டு, மாற்று தொழில் செய்ய அவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் தரப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாந கராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர்கள் ஆர்.கண்ணன், சுபோத்குமார், பிரவீன் நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.