

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தினமும் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக கோடைக்காலமான ஜூன், ஜூலை மாதத்தில் ‘மெட்ராஸ் ஐ’ வழக்கமாக காணப்படும். ஆனால் தற்போது மழை, வெயில் என மாறி மாறி வருவதாலும் மற்றும் வெயிலுடன் அனல் காற்று வீசி வருகிறது. இந்த பருவகால மாற்றத்தினால், சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவை தவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 100-க் கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமீதா புவனேஸ்வரி கூறியதாவது:
அடினோ வைரஸ் என்ற கிருமி மூலம் வரும் ‘மெட்ராஸ் ஐ’ பரவுகிறது. அதுவும் இந்த மாதத்தில் ‘மெட்ராஸ் ஐ’ வருவதற்கு, பருவகால நிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடும். அதனால், ‘மெட்ராஸ் ஐ’ பாதித்த நோயாளிகள் உபயோகப்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்ட எந்த பொருட்களையும் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கண் மருந்தை வாங்கி வீட்டில் உள்ள அனைவரும் போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கண் சிவப்பது, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் வீக்கம் போன்றவை ‘மெட்ராஸ் ஐ’ அறிகுறிகளாகும். அதனால் மெட்ராஸ் ஐ வந்தால், உடனடியாக கண் டாக்டரிடம் சென்று முறையான சிகிச்சைப் பெற வேண்டும்.
‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கு சிகிச்சைப் பெறாவிட்டால், கண்ணின் கருவிழி பாதிக்கும். அதன்பின் கண் பார்வை இழப்பும் ஏற்பட வாய்ப்புள் ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.