

தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2 ஆண்டுகளாக நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநில தகுதித் தேர்வு (செட்), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் (டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 3, 4) உள்ளிட்டவற்றுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வு பெற்று, அரசு வேலையை பெற வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. இந்நிலையில், உடுமலையில் தன்னார்வலர்களால் செயல் படுத்தப்படும் போட்டித் தேர்வு மையத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெண்களும்தான் அதிகம். உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பொள்ளாச்சி பகுதிக ளுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 170 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதில் 120 பேர் பெண்கள்.
இதுதொடர்பாக நூலக வாசகர் வட்டத் தலைவரும், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப் பாளருமான லெனின்பாரதி கூறியது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக, கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பயிற்சி மையம், தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. அப்போது கிடைத்த அனுபவங்கள் மூலமாக, உடுமலை நூலகத்திலேயே கடந்த ஆண்டு முதல் இப்பயிற்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது. பாடங்கள் நடத்துவதற்காக நூலகர் பீர்பாஷா, பேராசிரியர்கள் கிருஷ்ணன், குணசேகரன், சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ராகவன் ஆகியோரை கொண்ட தனி குழுவும் அமைக்கப்பட்டது.
நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் பயிற்சி மையம் செயல்படுவதை தெரியப்படுத்தினோம். ஆரம்பத்தில் 40 பேர் பயிற்சிக்கு வந்தனர். தற்போது 170 பேர் படிக்கின்றனர். பயிற்சிக்கான புத்தகங்கள், கையேடுகளை தயாரிக்க தனி குழு உள்ளது. இந்தக் குழுவினர், சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படும் மையங்களுக்கு சென்று, பயிற்றுவிக்கும் முறைகளை கற்றுக்கொள்வதுடன், வினா தாள் ஆகியவற்றையும் பெற்று இங்குள்ள மாணவர்களுக்கு அளிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், போதிய இருக்கைகள் இல்லாததாலும் பலர் தரையில் அமர்ந்து வகுப்புகளை கவனிக்கின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற நான்கு பேர் இளநிலை உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட அரசுப் பணிகளில் உள்ளனர். தமிழகத்திலேயே நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் முதல் பயிற்சி மையம் இதுதான் என்றார்.