Published : 02 Sep 2016 09:04 AM
Last Updated : 02 Sep 2016 09:04 AM

சிறுவாணியில் அணை கட்டும் இடத்துக்கு செல்ல முயற்சி: தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் கைது

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தை பார்வையிடச் சென்ற அனைத்துக் கட்சி குழுவினரை, தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் கேரள அரசு அணை கட்ட தீர்மானித் துள்ளது. இந்த அணை கட்டப் பட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்வது தொடர் பாக, கோவை காந்திபுரத்தில் அனைத்து கட்சிகள், அமைப்புகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், கேரள அரசு அணை கட்டுவதற்காக தீர்மானித்துள்ள இடத்தை செப்டம் பர் 1-ம் தேதி (நேற்று) அனைத்துக் கட்சி தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, தபெதிக, ஆம் ஆத்மி, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி கர இளைஞர் முன்னணி, தமிழ் நாடு வணிகர் சங்கம், மாட்டு வியாபாரிகள் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் ஜனநாயக கட்சி, தமிழ்ப் புலிகள் இளவேனில், கோப்மா, மக்கள் சிவில் உரிமைகள் கழகம், திராவிட மக்கள் இயக்கம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் உள்பட 25 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து நேற்று கோவையில் இருந்து 10 வாகனங்களில் புறப் பட்டனர். இதற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.

இந்நிலையில், தமிழக - கேரள எல்லையான, ஆனைகட்டிக்கு முன்னதாக மலை அடிவாரத்தில் உள்ள மாங்கரை சோதனைச் சாவடி யில் கோவை மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, கோவையில் இருந்து வாகனங் களில் சென்ற அனைத்துக் கட்சி குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து அனைத்துக் கட்சி குழுவினர் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 59 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்த கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அவர் கூறும்போது, “சிறுவாணி அணை பிரச்சினை குறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்” என்றார்.

கோவை மாவட்டம், மாங்கரையில் நேற்று மறியலில் ஈடுபட்ட அனைத்துக் கட்சி குழுவினர். (அடுத்த படம்) குழந்தைகளுடன் கைதான பெண்கள்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x