பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வாசன்
Updated on
1 min read

பகுதிநேர சிறப்பாசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்க்கைக் கல்வி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கட்டிடப் பணி ஆகிய பாடத்திட்டத்தில் பணிபுரிய 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தொடக்கத்தில் தொகுப்பூதியமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு, பின்பு 2014 ஆம் ஆண்டு ரூபாய் 2000 உயர்த்தப்பட்டு மொத்தம் 7000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பகுதிநேர சிறப்பாசிரியர்களாக கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இல்லையெனில் முழுநேர ஆசிரியராகப் பணி நியமனம் செய்து மாத ஊதியம் 15 ஆயிரத்துக்கும் குறையாமல் வழங்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளில் பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு குடும்பநல நிதியாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிக்கொடையாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மார்ச் 3, 2017 அன்று தமிழக கல்வி அமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியபோது அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடத்தினர். அப்போது இவர்களை கைது செய்த காவல்துறை சமுதாயக்கூடத்தில், மண்டபத்தில் அடைத்தனர். பிறகு நள்ளிரவில் சுமார் 12 மணி அளவில் ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதும், நடுரோட்டில் இறக்கிவிட்டதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களின் பணி மிகவும் இன்றியமையாதது. பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் வேலை செய்தாலும், தங்களின் கடின உழைப்பை, அயராத உழைப்பை மேற்கொள்ளும் போது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே தமிழக அரசு - பகுதிநேர சிறப்பாசிரியர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in