

முதுநிலை மருத்துவ படிப்புக்கான சென்டாக் கலந்தாய்வில் சீட் பெற்ற மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், வீதிகளை மீறி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மாற்றி கலந்தாய்வு நடத்துவதாகவும் ஆளுநர் கிரண்பேடியிடம் மாணவர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி, கடந்த 30-ம் தேதி சென்டாக் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31-ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டார். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
இருப்பினும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் சென்டாக் மூலம் சீட் பெற்ற மாணவர்களை சந்தித்து கருத்து கேட்க ஆளுநர் கிரண்பேடி தீர்மானித்தார். அதன்படி நேற்று, மாணவர்களுடனான சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் கடைசியில்தான் தலையிட்டேன். அது யாரையும் எதிர்த்து இல்லை.
சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டு வருகிறோம். நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். யாருக்கும் நான் சவால் விட விரும்பவில்லை. போட்டியிடவும் இல்லை. மாணவர் நலனே முக்கியம். இதற்காகத்தான் மாணவர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அவற்றை ஒருங்கிணைத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் செயல்படுத்துவேன்.
சென்டாக் கலந்தாய் விலும், மாணவர் சேர்க்கையிலும் என்ன நடந்தது என்பது குறித்து அனைத்து கருத்துக் களையும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு துணைநிலை ஆளுநராகவும், நிர்வாகி யாகவும், ஒரு தாயாகவும், அவர்களின் கருத்துக் களை அறிந்தேன். சில தனியார் கல்லூரிகளில் மாணவர் கள் சேர்க்கையில் விதிமுறை கள் மீறியுள்ளன. கலந்தாய்வின் போதும், அதற்கு பின்னர் சேர்க்கையின்போதும் என்ன நடந்தது என்பது தொடர்பான உரிய பதிவுகளை மாணவர்கள் அளித்துள்ளனர்.
மாணவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் நடக்கவுள்ள எம்பிபிஎஸ் கலந்தாய்வில் எந்த சிக்கலுமின்றி நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.