Published : 09 Jun 2017 11:40 AM
Last Updated : 09 Jun 2017 11:40 AM

பத்திரப்பதிவு கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் வீடுகள் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு 33% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தால் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கக் கூடும். அதேநேரத்தில் பதிவுக் கட்டணம் நான்கு விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதால் நேர்மையாக சொத்து மதிப்பைக் காட்ட விரும்புபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், 2012-ஆம் ஆண்டு ஏப்ரம் மாதத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்புகள் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டன. பகுதிவாரியாக நிலங்களை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பது தான் சரியான அணுகுமுறையாகும். இதைத் தான் பாமகவும் வலியுறுத்தி வந்தது.

ஆனால், அதை ஜெயலலிதா அரசு ஏற்காத நிலையில், பத்திரப் பதிவு மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்ததால், இப்போது தமிழக அரசு விழித்துக் கொண்டு, வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கிறது. ஆனால், வழிகாட்டி மதிப்பை உயர்த்துவதில் ஜெயலலிதா எந்த தவறை செய்தாரோ, அதே தவறை இப்போதைய எடப்பாடி அரசும் செய்திருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பும் எவ்வாறு கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டதோ, அதேபோல் இப்போது அனைத்து நிலங்களின் மதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவறாகும். நிலங்களில் தேவை, அமைவிடம், சந்தை மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு பகுதிக்குமான நில வழிகாட்டி மதிப்பை அரசு நிர்ணயித்திருக்க வேண்டும்.

2012-ஆம் ஆண்டில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தது என்பதும், இதனால் நில வணிகமும், பத்திரப்பதிவும் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பதும் உண்மை. அதே நேரத்தில் கணிசமான பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட குறைவாகவே இருந்தது. அங்கெல்லாம் வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கத் தேவையில்லை.

ஆனால், 2012-ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப் பட்டபோது அதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், பகுதிவாரியாக நில மதிப்பை நிர்ணயம் செய்தால் முன்பு நடந்த முறைகேடுகள் வெட்ட வெளிச்சம் ஆகி விடும் என்பதால், அதை மறைக்கும் வகையில் இப்போது அனைத்து நிலங்களின் மதிப்பும் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பதிவுக் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பயனை பதிவுக்கட்டண உயர்வு அழித்து விடும்.

உதாரணமாக ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கு நேற்று வரை முத்திரைக்கட்டணமாக ரூ.21 ஆயிரம், பதிவுக் கட்டணமாக ரூ.3000 என ரூ.24,000 செலுத்த வேண்டும். வழிகாட்டி மதிப்பு குறைப்பால் இது ரூ.16,000 ஆக குறைந்திருக்க வேண்டும். ஆனால், பதிவுக்கட்டண உயர்வால் ரூ.22,000 ஆக குறைந்துள்ளது. இதனால் பயனில்லை.

அதுமட்டுமின்றி, சில இடங்களில் சொத்துகளின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாக உள்ளது. சந்தை மதிப்பின்படி சொத்துகளை வாங்குபவர்கள் நேர்மையான முறையில் சொத்து மதிப்பை காட்ட நினைத்தால் அவர்கள் வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகமாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது நேர்மையாக செயல்பட நினைப்பவர்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி, சொத்துகளைப் பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 4 விழுக்காடு முத்திரைக் கட்டணம், ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை ஏற்று தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x