

நலவாழ்வு முகாமிற்கு அழைத்து வரும்போது, லாரியில் ஏற மறுக்கும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என, அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், நடக்கிறது. முகாம் தொடர்பான முன்னேற்பாடு குறித்து, பல்வேறு அறிவுரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:
# முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு, மருத்துவ, உடல் தகுதிச் சான்றுகளை கால்நடை மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்.
# நோய்வாய்ப்பட்டுள்ள யானைகள், மஸ்த் கால ஆண் யானைகள், உடல் ஊனமுற்ற யானைகள் மற்றும் கருவுற்ற யானைகள், நோய் வர வாய்ப்புள்ள மற்றும் லாரியில் ஏற மறுக்கும் யானைகளை முகாமுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
# வனத்துறையால் வழங்கப்பட்ட, யானைக்குரிய செல்லத்தக்க உரிமையாளர் சான்று வைத்திருக்க வேண்டும்.
தரமான லாரிகள்
யானையின் எடையைத் தாங்கும் வகையில், தரமான லாரிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். லாரியின் நான்குபுறமும் யானையின் உயரத்துக்கு ஏற்றவாறு பாதுகாப்பான சவுக்கு கட்டை தடுப்பு அமைக்க வேண்டும். யானைகள் சிரமமின்றி, லாரியில் ஏற வசதியாக ரேம்ப் அமைத்து பயிற்சி அளித்திருக்க வேண்டும்.
# யானையுடன் பாகன்கள் இருவர், உதவியாளர் ஒருவர், கால்நடை மருத்துவர் பயணிக்க வேண்டும்.
# யானை பயணிக்க உள்ள லாரியில், எரிபொருள், யானைகளுக்கு தேவையான உணவு, மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பயணத்தின்போது ஆங்காங்கே ஓய்வளித்தும், உணவளித்தும் பயணிக்க வேண்டும்.
எஸ்.எம்.எஸ். தகவல்
# யானைப் பாகன்கள் மற்றும் அவரோடு பயணம் செய்வோர், நலவாழ்வு முகாமில் தங்க தேவையான கம்பளி, ஸ்வெட்டர், குல்லாய், அவர்களது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை, அத்தியாவசிய மருந்துகள், டார்ச் லைட் உள்ளிட்டவற்றை உடன் வைத்திருக்க வேண்டும்.
# யானைகள் முகாமுக்கு செல்வதற்கு முன்பாக, புழு நீக்க சிகிச்சை செய்து ஆந்தராக்ஸ் நோய் தடுப்பு ஊசியை அளித்து, அதற்குரிய கால்நடை மருத்துவர் சான்று பெறுதல் வேண்டும். முகாமில் பங்கேற்கும் யானை, டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# யானைகள் முகாமுக்கு புறப்பட்ட பின்னர் நடுவழியில் இறக்கக் கூடாது. யானை எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது திருக்கோயில் அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்பு அலுவலர்களுக்கும், தலைமையிடத்துக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.