

கேரள மாநிலம், மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, வாக்கு விகிதம் உயராதது, பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இத் தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகமது வெற்றி பெற்றார்.
அவர் காலமானதால், இத்தொகுதிக்கு கடந்த 12-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேங்கரை தொகுதி எம்எல்ஏ பி.கே.குஞ்ஞாலிக்குட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியில் பைசல், பாஜக சார்பில் பிரகாஷ் போட்டியிட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், குறைந்தபட்சம் 11 தொகுதிகளை 2019-ல் கைப்பற்ற வேண்டும் என, பாஜக தலைவர் அமித்ஷா தமது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், இடைத்தேர்தலில் பாஜக மிகத் தீவிரமாக களப்பணி செய்தது. அத்துடன், கேரளத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுவதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை பாஜக நடத்தியது. இதனால், மலப்புரம் இடைத்தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைக்கும் என பாஜக நம்பியது. அதை தேசிய தலைமையும் விரும்பியது. ஆனால், முஸ்லீம் லீக் வேட்பாளர் குஞ்ஞாலிக்குட்டி 5,15,330 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அகமது வாங்கியது 4,37,723 வாக்குகள் மட்டுமே.
கடந்த தேர்தலில் 2,42,984 வாக்குகளை மார்க்சிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. இம்முறை மார்க்சிஸ்ட் வேட்பாளர் பைசல் 3,44,307 வாக்குகள் பெற்றிருந்தார்.
அதே நேரத்தில் பாஜக கடந்த 2014 பொதுத் தேர்தலில் 64,705 வாக்குகள் பெற்றது. இம்முறை பாஜக வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 65,675 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
மாட்டு இறைச்சி
கேரளாவில் அதிகமானோர் மாட்டு இறைச்சி பிரியர்கள். மாட்டுக் கறிக்கு பாஜகவின் கிடுக்கிப்பிடியே மலப்புரத்தில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதை உணர்ந்ததாலேயே பிரச்சாரத்தின் போது, பாஜக வேட்பாளர் பிரகாஷ், தான் வெற்றி பெற்றால் இங்கு நல்ல மாட்டு இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்றே பேசினார். ஆனால், கேரள மாநில பாஜக தலைவர் சிம்மனம் ராஜசேகரன், `அவர் எந்த சூழ்நிலையில் அப்படி பேசினார் என விளக்கம் கேட்பேன்” என்றார்.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ‘’மாட்டுக்கறி குறித்து வாயால் சொன்னால் போதாது. அதனை சிம்மனம் ராஜசேகரனே தொடங்கி வைக்க வேண்டும்” என பிரச்சாரத்தில் கிண்டலடித்தார்.
இடைத்தேர்தலில் தோல்வி ஒருபுறம், வாக்குகள் எண்ணிக்கை உயராதது மறுபுறம் என அதிர்ந்து போயிருக்கிறது கேரள பாஜக.