

ராமானுஜரின் 1000-வது ஜெயந்தி விழா நடக்கவுள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபாவின் செயலாளர் கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 1,500 ஆண்டு பழமையான ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஆனால், கோயிலிலும், கோயிலைச் சுற்றி லும் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக, மண் குவிய லாகக் காணப்படுகின்றன. குடிநீர் வசதி இல்லை. உடைமாற்றும் வசதி, தற்காலிக தங்கும் விடுதி போன்றவை ஏற்படுத்தப்பட வில்லை. 5 ஏக்கரில் குளமும், 5 ஏக்கரில் திடலும் உள்ளது. அங்கு குளிக்க முடியாத அளவுக்கு வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படவில்லை.
முதல்வர் தனிப்பிரிவிலும் மனு
ராமானுஜரின் 1000-வது ஜெயந்தி விழா நடக்க உள்ளதால் ஆதிகேசவப் பெருமாள் கோயி லில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை செயலாளர், ஆணை யாளருக்கு கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி மனு கொடுத்தேன். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவிலும் மனு அளித்தேன்.
இதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிப்பிரி வில் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும் அடிப்படை வசதிகள் செய்துதரப் படவில்லை. ராமானுஜரின் ஜெயந்தி விழாவையொட்டி, தேவை யான அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு வசதிகள்
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வு இந்த மனுவை விசாரித் தது. அப்போது, அரசு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜராகி, ‘‘ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதர அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியபோது, ‘‘மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோயிலில் ராமானுஜரின் 1000-வது ஜெயந்தி விழா சுமுகமாக நடக்கத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இந்த விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்து, வழக்கை முடித்துவைத்து உத்தர விட்டனர்.