Published : 21 Mar 2014 09:40 AM
Last Updated : 21 Mar 2014 09:40 AM

தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றிபெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவிப்பதற்காக சென்னை வந்திருந்த ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

10 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழில், உற்பத்தி, வர்த்தகம் அனைத்தும் சரிவடைந்துவிட்டன. ஐஐடி, ஐஐஎம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்களே வேலை கிடைக்காமல் வீட்டில் இருக்கிற சூழ்நிலை உள்ளது. எனவே மாற்றம் வேண்டுமென்றும், நரேந்திர மோடி தலைமையேற்க வேண்டும் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜக சரியான நேரத்தில் தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தது 25 தொகுதிகளிலாவது நிச்சயம் வெற்றிபெறும். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக இலங்கை-தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும். காங்கிரஸ் தலைமையிலான அரசு மீனவர் பிரச்சினையையும், இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் சரியாக கையாளவில்லை என்றார்.

பின்னர், அத்வானி போபாலில் போட்டியிடுவாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “1991 ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டு வரும் அத்வானியை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் போபாலில் போட்டியிட வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அவர் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறாரோ அந்த தொகுதியிலிருந்தே போட்டியிடட்டும் என்று அவரது முடிவிற்கே விட்டுவிட்டேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x