பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் கோரிக்கை

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் கோரிக்கை
Updated on
2 min read

மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்தி இந்தியாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் பணியில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டிருப்பது மக்கள் விரோதச் செயல் ஆகும்.

‘‘அடியாத மாடு படியாது’’ என்பது பழமொழி. ஆனால், இந்தப் பழமொழியையும் பொய்யாக்கும் வண்ணம், சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ள போதும், தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி வருகிறது.

சமையல் எரிவாயு உருளையின் விலையை 3 ரூபாய் 46 காசு என்று உயர்த்தி அதன் சுமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளாத சூழ்நிலையில், 20.12.2013 நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 41 காசு எனவும், டீசலுக்கான விநியோகக் கமிஷன் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும், எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது நியாயமற்ற செயல்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது ஓர் பொருளாதாரத்தில் தொடர் விளைவை ஏற்படுத்தக் கூடியது. அனைத்துப் பொருட்களும், பெட்ரோல் அல்லது டீசலினால் ஓடும் வாகனங்கள் மூலம் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வு என்பது அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த வழி வகுக்கும். ஒவ்வொரு இந்தியனும் பண வீக்க உயர்வால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பது அனைவரின், குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களின் வருமானத்தில் மேலும் குறைவை ஏற்படுத்தும்.

இந்த விலை உயர்வு, ஏழை எளிய மக்களின் செலவை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கடனில் சிக்கி தவிக்கவும் தான் வழி வகுக்கும். விலைவாசி உயர்வையும், பண வீக்கத்தையும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் கட்டுப்படுத்தாமல் ரூபாய் மதிப்பு சிறிதளவு வீழ்ச்சி, உலக சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, விநியோக கமிஷன் உயர்வு என காரணங்களைக் காட்டி, பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு 41 காசு என்றும், டீசலுக்கான விநியோகத் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும் உயர்த்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் ஆகும்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் ஓரளவு நிலையாக இருக்கின்ற இந்தத் தருணத்தில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒவ்வொன்றாக உயர்த்துவது நியாயமற்ற செயல் ஆகும்.

எனவே, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் நாட்டு மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in