Published : 11 Jul 2016 10:06 AM
Last Updated : 11 Jul 2016 10:06 AM

பட்டினப்பாக்கம் மக்களின் போராட்டம் வெற்றி: சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை 2 தினங்களில் மூட அதிகாரிகள் உறுதி

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை யை மூட வேண்டும் என்று அப் பகுதி மக்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு செவிசாய்க்கும் வண்ணம், அக்கடையை 2 தினங்களில் அப்புறப்படுத்து வதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கத் தைச் சேர்ந்த ஆசிரியை நந்தினி மற்றும் அவரது உறவுக்கார பெண் நஜ்ஜுவிடம் கண்ணன் என்பவர் கடந்த திங்களன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் நந்தினி பலியானார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் மது அருந்தியிருந்ததாகக் காவல் துறை கூறியது.

இதனால் ஆவேசம் அடைந்த பட்டினப்பாக்கம் பொதுமக்கள், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கடையால்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தினர். பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் பட்டினப்பாக்கம் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தின.

இதன்பேரில், கடந்த ஒரு வார காலமாக பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கையிலிருந்து பின்வாங்காததால், அந்தக் கடையை திறக்க வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடையை நிரந்தரமாக மூடிவிட்டு வேறு இடத்துக்கு மாற்றுவதாக பட்டினப்பாக்கம் மக்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இது தொடர்பாக கடல்அறக் கட்டளைத் தலைவரும், பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்்டங் களை முன்னெடுத்தவருமான ஆக்னஸ் கூறும்போது, ‘‘பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று ஒரு வார காலமாக போராட்டங்களை நடத்தினோம். இதன் விளைவாக சம்பந்தப்பட்ட கடையை 2 நாட்களில் மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் திவாகரன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனவே, எங்கள் போராட்டத்தை நிறுத்தியுள்ளோம். கடையை வேறு இடத்துக்கு மாற்று வதாகவும் கூறியுள்ளனர். சொன்னபடி செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x