

பெண் உறுப்பினர் என்றாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கொறடா விஜயதரணியை பேரவைத் தலைவர் எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதி லளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கொறடா விஜயதரணி எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். அவையை நடத்திக் கொண்டிருந்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து விஜயதரணி எழுந்து பேசிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், பேரவைத் தலைவர் தனபால் அவைக்கு வந்தார். அப்போதும் விஜயதரணி பேசிக் கொண்டே இருந்தார். இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் கூறியதாவது:
விவாதத்தின்போது விஜய தரணி, பிரின்ஸ் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் மாறி மாறி பங்கேற்கின்றனர். புதிய உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என தெரிவித் துள்ளேன். விஜயதரணி என்னிடம் கேட்டதற்கு, நாளை வாய்ப்பு தருகிறேன் என கூறியுள்ளேன். பட்டியல் அளித்தால் வாய்ப்பு தருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன்பிறகும் தொடர்ந்து விஜய தரணி பேசிக்கொண்டே இருந்தார்.
நிச்சயம் நடவடிக்கை
அப்போது, பேரவைத் தலைவர் தனபால், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியை பார்த்து ‘‘அவரை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெண் உறுப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளேன். இது கடைசி எச்சரிக்கை. இனியும் இதுபோல தொடர்ந்தால், பெண் உறுப்பினர் என்றும் பாராமல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தார்.