

தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் காரணத்தால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்தும், ஒரு சில இடங்களில் மதில் சுவர் சாய்ந்தும் உள்ளன.
சென்னையில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென் மேற்கு வங்கக்கடல் பகுதியையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும். சனிக்கிழமை தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்றார் அவர்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 11 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 10 செ.மீ., ராமநாதபுரம், நீலகிரி மாவட்டம் குன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 9 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னையைப் பொறுத்தமட்டில், மீனம்பாக்கத்தில் 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவானது.