Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

அடிப்படை வசதிகள் இல்லாத மாநகர பஸ் நிலையங்கள்

பெரும்பாலான மாநகர பஸ் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 765 வழித்தடங்களில் தினமும் 3652 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மாநகர் எல்லை விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், முக்கிய பஸ் நிலையங்களில்கூட குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அண்ணா சதுக்கம், வடபழனி, கே.கே.நகர், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி, கிண்டி, அயனாவரம், சைதாப்பேட்டை, வியாசர்பாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் கழிப்பறை கட்டப்படவில்லை. இதனால், பயணிகள் அவசரத்துக்குகூட ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அண்ணா சதுக்கம் பஸ் நிலையம், 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கிருந்து கோயம்பேடு, எண்ணூர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 250-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெரினா கடற்கரைக்கு வருபவர்கள், அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்துக்கு சென்றுதான் பஸ் ஏறுகின்றனர். அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பிடங்கள் இல்லை. சுகாதாரமான குடிநீர், போதுமான நிழற்கூரை, இருக்கைகள் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்களின் நிலை பெரும் திண்டாட்டம்.

‘‘குடிநீர் கூட கடைகளில் வாங்கிக் கொள்கிறோம். ஆனால், கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் நிலையங்களில் கழிப்பிட வசதிகளை அரசோ அல்லது போக்குவரத்து நிர்வாகமோ ஏற்படுத்தித் தந்தால் நன்றாக இருக்கும்’’ என்கின்றனர் பயணிகள்.

போக்குவரத்து ஊழியர்கள் கூறும்போது, ‘‘அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாதது பயணிகளுக்கு மட்டுமின்றி, எங்களுக்கும் சிரமமாக உள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x