

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற அணியுடன் கூட்டணி சேருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சந்தித்து பேசினார். அவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினர். பின்னர், வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற அணியுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்தை வலியுறுத்தினோம். விடுதலை சிறுத்தைகள் உள்ள அணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். பிப்ரவரி 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடக்கவுள்ள மாநாட்டில் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவை அறிவிப்பேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.