அரசு கலைக் கல்லூரிகளில் இடங்கள் குறைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு: கல்லூரி பேரவைகள் கண்டுகொள்ளாதது ஏன்?

அரசு கலைக் கல்லூரிகளில் இடங்கள் குறைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு: கல்லூரி பேரவைகள் கண்டுகொள்ளாதது ஏன்?
Updated on
2 min read

பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங் கலை, முதுகலை படிப்புகளில் இடங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் 67 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் உள்ளன. தனியார் சுயநிதி கல்லூரிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு கல்லூரிகளையே நாடு கின்றனர்.

அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்பு களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். முன்பு இளங்கலை படிப்புகளில் 70 மாணவர்கள் வரை சேர்க்கப் பட்டனர். தமிழ்வழியில் 70 இடங்கள், ஆங்கிலவழியில் 70 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக குறைந்தது. கடந்த கல்வி ஆண்டில் (2015-16) அந்த எண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டது.

சென்னையில் பாரம்பரியமிக்க அரசு கல்லூரியான ராணி மேரி மகளிர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, எம்பில், பிஎச்டி படிப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக் கின்றனர். இளங்கலை படிப்பு களில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம்) கடந்த கல்வி ஆண்டில் இருந்து தமிழ்வழியில் 24 மாணவிகள், ஆங்கிலவழியில் 24 பேர் சேர்க்கப் படுகின்றனர்.

10 ஆயிரம் விண்ணப்பங்கள்

சாதாரணமாக இளங்கலை படிப்புகளில் சேர சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால், இடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குகூட இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.

இதேபோல, முதுகலை படிப்பு களிலும் இடங்கள் குறைக்கப் பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் முன்பு எம்எஸ்சி படிப்பில் 20 பேர், எம்ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் 40 பேர் சேர்க்கப்பட்டனர். தற்போது எம்எஸ்சி படிப்பில் 12 பேர், எம்ஏ படிப்பில் 20 பேர் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர்.

பொதுவாக மாணவ, மாணவி களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் இடங்களை 30 சதவீதம் வரை அதிகரிக்க, துறைத் தலைவர் களை உள்ளடக்கிய கல்லூரி பேரவை நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால், ராணி மேரி கல்லூரி பேரவை கடந்த 2 ஆண்டுகளாக அதற்கான முயற்சியை எடுக்க வில்லை என்பது பேராசிரியை களின் குற்றச்சாட்டு. போதிய எண்ணிக்கையில் ஆசிரியைகள், ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்ட மைப்புகள் என அனைத்து வசதிகளும் இருந்தும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்லூரி நிர்வாகம் ஏன் தயங்குகிறது என்பது பேராசிரியைகளின் கேள்வி.

தமிழகத்தில் உள்ள பெரும் பாலான அரசு கலை கல்லூரிகளில் இதுபோன்ற குறைபாடுகள் காணப் படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். அரசு கலை கல்லூரிகளில் இடங்களை அதி கரிக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஏழை மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களிடம் இருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் அதற்கேற்ப ஒவ்வொரு படிப்பிலும் இடங்களின் எண் ணிக்கையை அதிகரிக்க கல்லூரி பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in