

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக்-அதாலத்தில் 58 ஆயிரம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.83 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் நேற்று லோக்- அதாலத் நடத்தப் பட்டது.
மின்சாரம், குடிநீர், தொலைபேசி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சொத்து வரி, திருமணம் தொடர்பான பிரச்சினைகள், வங்கி மற்றும் பொதுமக்கள் பயன்பாடு தொடர்புடைய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
லோக்-அதாலத்தில் முதல்முறை யாக கூட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளான குற்றவியல் வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.விமலா, பி.கோகுல்தாஸ் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் தலைமையில் சிறப்பு அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன. இதேபோல மாநிலம் முழுவதும் 244 நீதிபதிகள் மற்றும் ஓய்வு நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வுகள் பணியமர்த்தப்பட்டு இரு தரப்பிலும் விசாரித்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
ஒரேநாளில் 58 ஆயிரத்து 437 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.83 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. லோக்-அதா லத்துக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்காராமன் தலைமையில் நீதித்துறை ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.